Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


RD NOVEL ஏ.எஸ் வைரஸ் - Tamil Novel

Status
Not open for further replies.

20

“ஒரு குடும்பப் பொம்பள பண்ணுற காரியமா இது?? நான் இருக்கிறேன், பிள்ளைங்க இருக்கிறாங்க.. குடும்பச் சூழல் இப்படி இருக்குது... நீ பாட்டுக்கு என்னவோ பண்ணிட்டு இருக்கிற?? போன்ல முன்னபின்ன தெரியாத ஆம்பளை கூடப் பேசுறதே தப்பு?? அதிலேயும் வீடியோ கால் வேறயா?? யாருடி அவன்??” எனக் கோபத்துடன் வினவ, எதுவும் பேசாமல் அமைதியாக நின்றாள் அவள்.

“இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்??” எனக் கர்ஜித்தவன்; கையிலிருந்த அலைபேசியைப் பிடுங்குவதற்குள் அழைப்பைத் துண்டித்துவிட்டுச் சென்றிருந்தான் மூர்த்தி.

கோபத்துடன் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தவன்; அலைபேசியின் தொடுதிரையைத் தொட, அது கிங்காங் செயலியைக்குள் இட்டுச் சென்றது.

“கிங்காங் யாரு உன்னை இன்ஸ்டால் பண்ண சொன்னது??” எனத் திட்டியவாறே அவன் பார்க்க, அவளது காணொளிகள் அடங்கிய பட்டியல் திறந்து கொண்டது.

“என்னடி பண்ணி வச்சிருக்கிற?? என்ன கருமம் இது?? இதை இன்ஸ்டால் பண்ணவே கூடாதுன்னு சொல்லியிருக்கிறேன்.. நீ இத்தனை வீடியோ பண்ணி வச்சிருக்கிற??” எனப் பல்லைக் கடித்தவாறே ஒவ்வொரு மெனுவிற்குள்ளும் சென்று பார்வையிட, பல விஷயங்கள் சிக்கின.

அவள் அடித்திருந்த கூத்துகளை மொத்தமாக ஒரே இடத்தில் பார்த்துவிட்டவன்; “சத்யா... ஏன்டி இப்படிப் பண்ணி வச்சிருக்கிற?? உனக்கு நான் என்ன குறை வச்சேன்?? எதாவது தேவைன்னா என்கிட்டே கேட்டிருக்கலாமே... கடனை வாங்கியாவது உனக்கு வாங்கித் தந்திருப்பேனே... எப்பவும் அன்பாதானே பேசினேன்.. சத்யாங்கற சொல்லுக்கு மறுசொல் சொன்னது இல்லையே.. அப்படி இருக்கிறப்போ நீ ஏன்டி இப்படிப் பண்ணிட்டு இருக்கிற?” என நொந்து போய் நாற்காலியில் அமர்ந்துவிட்டான்.

அவன் தனக்குள் மனம் நொந்து, மருகி, வேதனையில் துடித்துக் கொண்டிருக்க, சத்யாவோ எவ்வித சலனமுமில்லாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தாள்.

சில நிமிடங்கள் கடந்த பின்னர், “சரி சத்யா.. நடந்ததெல்லாம் நடந்து போச்சு... எல்லாத்தையும் ஒரு கெட்ட கனவா நெனச்சு மறந்துடலாம்... நமக்குப் பிடிச்ச எல்லா விஷயமும் இந்தப் போனோட போகட்டும்... இப்பவே இதை இங்கேயே உடைச்சிடலாம்.. இதுக்கு மேல நமக்கு இந்தப் போன், ஆப் எதுவும் வேணாம்.. இங்கே இருக்கிறதாலதான் உனக்கு அந்த மாதிரி எண்ணங்கள் தோணுதுன்னா நாம வேற வீட்டுக்குப் போயிடலாம்.. உன்னோட இஷ்டப்படி பெரிய வீடா கூட வாடகைக்கு எடுத்துக்குவோம்... நான் ஓவர்டைம் பார்த்து சமாளிச்சிடுவேன்... தயவுசெய்து எந்தத் தப்பான வழியையையும் தேர்ந்தெடுத்துடாத சத்யா... பசங்க இப்பதான் வளர்ற ஸ்டேஜ்ல இருக்கிறாங்க... நல்லது கெட்டது சொல்லித் தர்றதுக்கு ஒரு அம்மாவா நீ இருக்கணும், உன்னோட அன்பு மட்டும்தான் அவங்களை நல்லபடியா வாழ வழிசெய்யும்..” எனப் பிரபு அவளது கையைப் பிடித்துக் கொண்டு கெஞ்ச, “இல்ல... முடியாது... நீங்க சொல்ற மாதிரி எங்கே வேணா போகலாம்... ஆனா இந்தப் போன், ஆப் எல்லாத்தையும் விட முடியாது..” என உறுதியாகக் கூறிவிட்டாள்.

“சத்யா... இதெல்லாம் நம்ம குடும்பத்துக்குச் சரிப்பட்டு வராதும்மா... இப்போ பிரச்னை இந்த ஆப் இல்ல... உன்னோட வீடியோஸ்... சும்மா பாடி, நடிச்சுப் போட்டிருந்தா பிரச்சனை இல்ல... நீ கொஞ்சம் அடுத்தகட்டத்துக்கே போயிருக்கிற...”

“இப்போ அதுக்கு என்ன!? அந்த மாதிரி ட்ரெஸ் பண்ணிட்டு போடுற வீடியோஸ்க்கு தான் வியூஸ் அதிகமா இருக்குது.. நல்லா பாருங்க..”

“ம்மா... வியூஸ் வச்சிட்டு என்ன பண்ணப் போறம்மா? அதை வச்சு சாப்பிடவா முடியும்??”

“ம்ம்ம்.. முடியும்... என் அக்கவுன்ட் வெரிபை ஆகிருச்சு... காசு வருது..”

“சரிம்மா.. அதுக்காகச் சுயத்தை இழந்துட்டு சவுகரியமா வாழ முடியுமா?? அது வேஸ்ட் தானே...”

“சும்மா எதையாவது உளறிட்டு இருக்காதீங்க... கஷ்டப்பட்டு இவ்ளோ பாலோவர்ஸ், ஹார்ட்டு வாங்கியிருக்கிறேன்.. எவ்ளோ கஷ்டம் தெரியுமா??”

“புரியுது சத்யா... ஆனா அவங்க எல்லாரும் உன்னோட வீடியோவைப் பார்த்துட்டு, ஒரு லைக்கோ கமெண்டோ தட்டிட்டு போயிடுவாங்க... அவங்களுக்குன்னு தனியா ஒரு வேலை, குடும்பம்னு இருக்குது.. உனக்கு ஒரு குடும்பம் இருக்குதுதானே.. அவங்க யாரும் இங்கே உன்னோட வந்து நிக்கப் போறதில்லை.. நானும் நம்ம பசங்களும்தான் நிரந்தரம்..”

“இப்போ நான் ஒண்ணும் உங்களைவிட்டுட்டு போறேன்னு சொல்லலை... நான் பாட்டுக்கு என் வழியில போறேன்... நீங்க பாட்டுக்கு உன் வேலையைப் பாருங்க... என்னைத் தொந்தரவு பண்ணாதீங்க... அவ்ளோதான்..”

“சத்யா... என் பொறுமையை ரொம்பச் சோதிக்கிற... எல்லாத்துக்கும் ஒரு எல்லை உண்டு...” எனப் பிரபு கர்ஜிக்கத் தொடங்க, “என்ன முட்டாள்தனமா பேசிட்டு இருக்கிறீங்க?! நான் எவ்ளோ ஹார்ட் ஒர்க் பண்ணி இந்த இடத்துக்கு வந்திருக்கிறேன்... எனக்கு எவ்ளோ பேன்ஸ் இருக்கிறாங்க தெரியுமா?” எனப் பதிலுக்கு வாதம் செய்தாள் சத்யா.

அதற்குமேல் அவளிடம் பேசி புரிய வைக்க இயலாது என உணர்ந்து கொண்ட பிரபு, “என்னவோ பண்ணித் தொலை... இதுக்கு மேல உன்னோட இஷ்டம்... ஆனா ஒரு விஷயம்... என்னைக்கும் எதாவது பிரச்சனைன்னு வந்தா நான் வந்து நிக்க மாட்டேன்.. அவ்ளோதான் சொல்லிட்டேன்..” எனக் கூறிவிட்டு வெளியே சென்றுவிட்டான்.

குடும்பத்தைப் பிரிந்து, வீட்டைவிட்டு வெளியேறி வந்த சத்யாவிற்குத் துணையாக நின்றான் அவளது நண்பன் டிக்கா. கிங்காங் செயலியில் அவளைத் தீவிரமாகப் பின்தொடர்பவர்களில் அவனும் ஒருவன். கணவனை விட்டு வெளியேறி வந்த சமயத்தில் அவளுக்கு ஆதரவாக நின்றவன் அவனே. அவனுக்குத் திருமணமாகி, ஒரு பெண் ஒரு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

சத்யாவிற்கு ஆதரவாக அவன் குரல் கொடுக்கவும் அவனது மனைவிக்கும் அவனுக்கும் சண்டையாகிப் போனது. எனவே, வீட்டைவிட்டு வெளியேறிய டிக்கா, சத்யாவை அழைத்துக் கொண்டுபோய்த் தனியே ஒரு வீட்டில் குடியேறி விட்டான்.

இது சட்டத்திற்குப் புறம்பானது எனினும் இருவரும் எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. குடும்பத்திற்கு அசிங்கம் என்பதால் சத்யாவின் குடும்பத்தினரோ டிக்காவின் குடும்பத்தினரோ எந்தப் புகாரும் அளிக்காமல் அமைதியாக இருந்துவிட்டனர்

எப்போதும் நேர்மறை விஷயங்களைத் தாண்டி எதிர்மறைகள் தான் விரைவில் அடுத்தவர்களைச் சென்றடையும்; அந்த வகையில் நாம் செய்யும் தவறான செயல்கள் விரைவில் அடுத்தவரை சென்று சேர்ந்துவிடும்.

இங்கே ‘பாடி ஷேமிங்’ என்றொரு வார்த்தை உண்டு. உடல் அமைப்பை வைத்து கேலி செய்தல் எனப் பொருள்படும். அதாவது நாம் சிவப்போ, கருப்போ, உயரமோ, குட்டையோ, ஒல்லியோ, பருமனான உடலமைப்போ எதுவாயினும் நமது வெளித்தோற்றத்தைக் கொண்டு இகழ்ந்து உரைப்பதை அல்லது விமர்சிப்பதை “பாடி ஷேமிங்’ என்பர்.

இந்த ‘பாடி ஷேமிங்’ மூன்று வகையிலான எதிர் விளைவுகளை ஏற்படுத்தவல்லது. முதல்வகை – வெறியைத் தூண்டும். அதாவது நம்மை இழிந்துரைத்தவரின் வார்த்தைகள் காதுகளில் மீண்டும் மீண்டும் ஒலித்தவாறே இருந்து வெற்றிக்கான வெறியைத் தூண்டும். எப்படியேனும் சாதித்தேயாக வேண்டும் என்னும் உத்வேகத்தைத் தரும்.

இரண்டாம் வகை – தாழ்வு மனப்பான்மை. இதில் மனதிற்குள்ளேயே அவர்களது வார்த்தைகள் தேங்கிக் கிடக்கும். உதாரணமாக அணைநீர் ஆவியாகாமல் இருப்பதற்கு மேற்பரப்பில் தெர்மாக்கூல் போடுவது போல, அந்த வார்த்தைப் படலம் மேலே பரம்பிக் கொண்டு, உள்ளே இருக்கும் நீர் ஆவியாகாதது போல நம்மின் வளர்ச்சியைத் தடுக்கும்.

மூன்றாம் வகை – எருமை மாட்டின் மீது மழை. அதாவது அதெல்லாம் இவர்களுக்குப் பெரிதாகத் தெரியாது.. எவர் எண்ணக் கூறினாலும் தங்கள் போக்கில் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் கடந்துவிடுவர். பல விஷயங்களில் இது ஏற்புடையதாக இருந்தாலும் பல இடங்களில் மந்தத் தன்மைக்கு வழிவகுக்கும்.

இவ்வாறாக உடல்தோற்றத்தைக் கொண்டு கேலிசெய்தல் என்பது பலருக்கு ஒருவகையில் மன சிதைவு தரக்கூடியது; பலருக்கு எழுந்து செயலாற்ற வேண்டும், அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் அளவிற்கு உயர வேண்டும் எனும் உத்வேகத்தைத் தரவல்லது.

ஆனால் சிலர் அதையும் காட்சிப் பொருளாக்கி, விளம்பரப் பொருளாக்கிக் கொண்டிருந்தனர். சற்றே உடல் பருமனுடன் இருக்கும் பெண் காணொளியில் தோன்றினால், அனைவரும், “நீ எல்லாம் எதுக்கு வீடியோ போடுற??” என்பதாகக் கமெண்டில் கழுவி ஊற்றுவது வழக்கம்.

முன்னர்க் கூறியது போலச் சமூக வலைத்தளங்களும் ஒருவகையில் குப்பைகளைக் கொட்டும் குப்பைத் தொட்டி தானே. எவரேனும் உடல் தோற்றத்தைக் குறித்து எதாவது தரக்குறைவாகப் பேசியிருந்தால், அதற்குப் பதிலடி கொடுக்கிறேன் என்கிற ரீதியில் பல வீடியோக்களைப் பதிவேற்றிக் கொண்டிருப்பர்.

சிலர் “குண்டச்சி, சப்பை மூக்கு, கோணவாய், ஊத்த வாய்” எனத் தரக்குறைவான வார்த்தைகளை உதிர்த்தாலும் பல வசவுமொழிகளில் ஏசினாலும் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாது லட்சியத்தின் பாதையில் ஓடி, அனைவரும் வியந்து பார்க்கும் வகையில் உலகம் போற்றும் ஒரு தன்னம்பிக்கையை ‘ஐகானாக’ உயர்ந்து நின்றவர்கள் பலர்.

ஆனால் இவர்கள் அதைப் பார்வைகளைப் பெரும் நோக்கில் காணொளியாகப் பதிவிட்டுக் கொண்டிருந்தனர். தன்னைப் பற்றியும் தனது நடவடிக்கைகளைப் பற்றியும் எவரேனும் தவறான கருத்துகளையோ விமர்சனங்களையோ பதிவிட்டிருந்தால் அதற்குப் பதிலடி தரும் வகையில் க்ளோசப்பில் பல்லை மட்டும் காணொளியாகப் பதிவு செய்து பதிவேற்றிவிடுவர்.

ஒருவர் இதைச் செய்ய, அதைப்பற்றி இன்னொருவர் அந்தச் செயலை வறுக்கும் (Roast) வகையில் இன்னொரு காணொளியைப் பதிவிடுவார். அந்தக் காணொளி வலைத்தளத்தில் சிலரால் பகிரப்படும்.

தங்களுக்குப் புகழ் கிட்டினால் போதுமானது எனும் நோக்கில் பலரும் இதைச் செய்யத் தொடங்கிவிட்டனர் எப்போதாவது எதேச்சையாக அறியாமல் இந்தக் காணொளிகளைக் காணக் கிட்டினால் ‘குக்கீஸ்’ மூலமாக அடுத்தடுத்து இதுபோன்ற காணொளிகள் நமக்கு வருவது சாதாரணம்.

அவற்றை எல்லாம் திறந்து பார்த்தால் காண சகியாது. வாயில் உணவை மெல்வது, வாய்க் கொப்பளிப்பது இதுபோன்ற பல முகம் கூசும், முகம் சுளிக்க வைக்கும் காணொளிகளையும் சற்றும் தயங்காமல் பதிவேற்றி இருப்பர்.

இதில் சிறப்பம்சமாகச் சிலரெல்லாம் எவருக்குப் பதில் தருகிறேன் என்பதே தெரியாமல் இஷ்டம் போல வார்த்தைகளால் வறுத்து எடுத்து பதிவிட்டு இருப்பர். பக்கத்து வீட்டில் வரிசைக்குச் சரிவர இரண்டு குடம் தண்ணீர் கிடைக்காவிட்டால் கூடக் காணொளியில் பக்கத்து வீட்டுப் பெண்ணைத் திட்டி பதிவேற்றுதல் வழக்கமாகிப் போனது.

பதிவிடுபவர்கள் தான் இப்படி என்றால் அதை ஊக்குவிப்பவர்கள் ஏராளம். “அப்படித்தான்... சூப்பர்... சூப்பர்..” எனக் கைதட்டி, ஆரவாரித்து, ஊக்குவிப்புச் செய்பவர்கள் பலர். இவர்களால் அந்த அஷ்டகோணலான முகம் சுளிப்புதரும் காரியங்களையே தங்களின் விசித்திரமான செய்கையே தங்களுக்கான சிக்னேச்சர் அடையாளமாக மாற்றிக் கொண்டவர்கள் பலர்.

“நமஸ்தேவுங்கோ...” எனக் கூறிக்கொண்டு காணொளி பதிவேற்றுபவருக்கு எதிராக அவரைத் திட்டி பதிவிடுபவர்கள் ஒரு கும்பல் என்றால் அவரை ஆதரித்துக் காணொளி பதிவேற்றுபவர்கள் இன்னொரு கும்பல்.

முதலில் பொழுதுபோக்குக்காகக் காணொளியில் ஏதோவொரு குரலுக்கு வாயசைத்து பதிவேற்ற உள்நுழைந்த பலர், இப்போது தங்களின் சொந்த குரலிலேயே தங்களது மனதின் வக்கிரங்களையும் குரூரத்தையும் பதிவு செய்து தங்களுக்குள் உறங்கிக் கிடந்த கவனயீர்ப்பு செய்யும் தாகத்தையும் தீர்த்துக் கொள்ளத் தொடங்கினர்.

இதுவரை எந்த அங்கீகாரமும், எந்தப் பாராட்டும் கிடைக்கப் பெற்றிராத அவர்களுக்கு இது ஒரு புத்துணர்ச்சி தரும் விஷயமாகிப்போனது.
 
Last edited:

21

சற்றே நாகரீகமான பணியிலிருக்கும் இளைஞர்கள் தங்களது சோர்வைப் போக்கிக் கொள்ள, அவ்வப்போது காணொளிகளைப் பதிவிட்டால் அவர்களைப் பின்தொடர்வோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். அது அவர்களுக்கு ஒரு பொழுதுபோக்கு.

அது பொழுதுபோக்கு என்பதான கான்சியஸ் இருக்குமாதலால் பொழுதுபோக்கிற்காகப் பதிவேற்றி விட்டு கடந்து விடுவார். ஆனால் இதையே உலகம் என்று எண்ணி கருதிக்கொண்டு உள்ளேயே ஊறிக் கொண்டிருக்கும் சிலருக்கு வெளி உலகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான்.

எவரேனும் தங்களை ட்ரோல் செய்கிறேன் எனச் சில காணொளிகளைப் பதிவேற்றினால் அது தங்களுக்கான ‘அங்கீகாரம்’, தாங்கள் பிரபலமாகி விட்டோம் எனத் தவறாக எண்ணிக் கொண்டனர். தங்களைக் கலாய்க்கின்றனர் என்பது கூட அவர்களுக்கு உரைக்கவில்லை.

பல நாட்களாகத் தாழ்வு மனப்பான்மையில் முடங்கிக் கிடந்த கண்ணம்மா என்ற பெண் இந்தச் செயலியின் மூலம் தனக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்துவிட்டது என்று தனக்குள்ளாகவே எண்ணிக்கொண்டு, ‘பாரதி என்பவன் என் காதலன்; என்னை ஏமாற்றிவிட்டு ஓடிவிட்டான்’ எனக் கூறிக்கொண்டு நடைபயணத்தைக் கிளப்பி விட்டார்.

ஒவ்வொரு ஊராக ‘பாரதியை தேடுகிறேன்’ என ஒவ்வொரு ஊராகச் சென்று, ‘பாரதி’ எனும் பெயரில் இருக்கும் அனைவரையும் கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது என இருந்து அனைத்தையும் காணொளியாகப் பதிவேற்றிக் கொண்டிருந்தார்.

சற்றே உடல் பருமன் அதிகமாக இருக்கும் அவரை எவரேனும் கேலி செய்து வலையொளி தளத்தில் காணொளியை பதிவேற்றியிருந்தால் அதற்கும் ‘பதிலடி கொடுக்கிறேன் பேர்வழி’ என்று எதாவது ஒரு சர்ச்சைக்குரிய காணொளியை பதிவிட்டு இருப்பார்.

அவர் ஒவ்வொரு ஊராகச் சென்று “நீ என் பாரதியா?? நீ என் பாரதியா??” என ஒவ்வொரு ஆண்களையும் விரட்டுவதே அவருக்கு வேலை. இது அனைத்தும் இந்தக் கிங்காங் செயலி காணொளிகள் வாயிலாகக் கிடைத்த தன்னம்பிக்கைதான். அவரைக் கண்டாலே தெறித்து ஓடுவர் பலர். அதைப் படம்பிடித்துச் செயலியில் பதிவேற்றுவார்.

இவரைப் போன்றே கிரின்ஜ் வீடியோக்கள் பதிவேற்றிக் கொண்டிருக்கும் சிலர் தங்களது லாபத்திற்காக இவரை அழைத்து, ஏதேனும் ஒன்றை பேசக் கூறி, காணொளியாகப் பதிவு செய்து கொண்டு செல்வர்.

இந்தப் பெண் செய்த காரியங்கள் எல்லாம் கணக்கிலடங்காதவை. தன்னைப் பிரபலம் என எண்ணிக்கொண்டு அவர் செய்த காரியங்களின் சாராம்சம் பின்வருமாறு :

• முதலில் தன் பெயரின் பின்னே தனது சாதியின் அடையாளத்தை இணைத்துக்கொண்டார். மற்ற மாநிலங்களில் எல்லாம் தங்கள் பெயருக்குப் பின்னே ஜாதியின் பெயரை இணைத்துக் கொள்ளும் வழக்கம் உள்ளது. ஆனால் தமிழ்நாட்டிலோ அது இல்லை. இங்கே அனைத்து சாதிகளும் ஒன்றுதான். ஆனால் அவரோ தன் சாதியின் பெயரை பின்னால் இணைத்துக் கொண்டதற்குக் காரணம் தன்னைப் பலரிடம் கொண்டு சேர்ப்பதற்காக.

• அதன் பின்னர்த் தன் காதலனை தேடிக் கொண்டு ஊர் ஊராகச் சென்றார். அங்கே செல்கையிலும் காணொளியில் அந்தக் குறிப்பிட்ட நபரின் பெயரை கூறி, அவரது பெயரைத் தொடர்ந்து நான்கைந்து கெட்ட வார்த்தைகளைக் கூறி அவரை அர்ச்சித்து “எங்கேடா இருக்கிறாய்??” எனக் கூறுவார்.

• நடுரோட்டில் அமர்ந்து கொண்டு தர்ணா செய்வார். ஏதாவது ஒரு டீக்கடைக்கு (அ) ஹோட்டலுக்குச் சென்று அமர்ந்துகொண்டு, தனக்கு உணவு இலவசமாகத் தரவேண்டும், தான் செயலியில் புகழ் பெற்றவர் எனக் கூறி, சட்டமாக அமர்ந்துகொண்டு விதண்டாவாதம் செய்வார்.

• “மனநோயாளி” எனக் கண்ணம்மாவிற்குப் பலர் பட்டம் சூட்டி இருந்தாலும் அவளது பிரச்சனை என்ன எனத் தெரிந்து, அதைத் தீர்த்துவைக்க முன்வந்தது ஒரு தனியார் நிறுவனம். “செப்புவதெல்லாம் மெய்” போன்றதொரு நிகழ்ச்சி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து, என்ன பிரச்சனை என விசாரிக்க, அவள் “ஆர்த்தி” என இன்னொரு பெண்ணைக் குற்றம் சாட்டினார். அதாவது தானும் பாரதியும் காதலித்ததாகவும் அதற்கு ஆர்த்தி என்ற பெண் தடையாக இருந்ததாகவும் பாரதியை அவர் தான் கடத்தி வைத்துக்கொண்டு தன்னுடன் சேரவிடாமல் தடுப்பதாகவும் தனக்கு நீதி வழங்குமாறு கோரிக்கை வைக்க வைத்தாள். மேலும் எதிரில் அமர்ந்திருந்த பெண்ணைப் பல ஆண்களுடன் தொடர்பு இருக்கிறது எனப் பலவாறாகக் குற்றம்சாட்டினார்.

• இவ்வாறாகப் பல பல நாடகங்களை அரங்கேற்றி, ஒருகட்டத்தில் மூன்றாம் பாலினத்தவர் சர்ச்சையான காரியங்களைப் பேசி பதிவிட்டிருந்தார். இதைக் கண்ட அவர்கள் வீடு தேடி வந்து, அவளை எச்சரித்து விட்டு செல்ல, சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்காகக் கைது செய்திருந்தது தமிழகக் காவல்துறை.

இப்போது கண்ணம்மா சிறையில் இருக்கிறாள். அந்தச் சுவற்றை வெறித்துப் பார்த்து, தனக்குள்ளாகவே ஏதோ ஒன்றை பேசிக் கொண்டே இருப்பாள்.

இப்போது கழிவுநீரில் கூத்தடிக்கும் உயிரினங்களாக மூர்த்தி, ‘ரவுடி பேபி’ சத்யா, கண்ணம்மா, ‘நமஸ்தேவுங்க’ கலா என இன்னும் பலர் மாறிவிட்டனர் இவர்கள் அனைவரையும் குறித்து ஒரு சமூக ஆர்வலர் காவல் துறையில் புகார் அளித்திருக்க, அவரது புகாரின் பேரில் அனைவரையும் கைது செய்துவிட்டனர் காவல்துறையினர்.

வெண்ணிலாவையும் சாரதாவையும் காவலர்கள் கைது செய்ய நினைத்தாலும் அவர்கள் அளவில் பெரிதாக எந்தப் பாதிப்பும் நேரவில்லை என்பதால் அவர்கள் இன்னமும் கைது செய்யப்படவில்லை. அர்ஜுன்-ரோஜா கைது செய்ய வேண்டிய நேரம் நெருங்கிக் கொண்டுதான் இருந்தது எனலாம்.

ஆனால் இதை எதையும் அறியாமல் அவர்கள் தொடர்ந்து தங்களது காணொளிகளைப் பதிவேற்றியவாறு இருந்தனர். அவர்களது ஒட்டுமொத்த சாம்ராஜ்யமும் சரியும் வேளையும் வந்தது.

அது எவ்வாறு என்றால் குட்டி விவேக் என்னும் ஒரு 16 வயது சிறுவன் 13 வயது சிறுமியுடன் இணைந்து இவர்களைப் போன்றே செயலியில் வீடியோக்களைப் பதிவேற்றிக் கொண்டிருந்தான். அது சமுதாயச் சீர்கேட்டை ஏற்படுத்தும், பலருக்கு ஒரு தவறான உதாரணமாகச் சென்று சேரும் எனச் சமூக ஆர்வலர்கள் பலர் குரல் கொடுத்ததால் அவர்கள் இருவரையும் கைதுசெய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர் காவல்துறையினர்.

அவர்களுக்கு முன்னுதாரணமாக இருந்த அர்ஜூன் மற்றும் ரோஜாவை கைது செய்யுமாறு உத்தரவிட்டார் மாநகரக் காவல் ஆணையர். இவ்வாறு கைது செய்யப்பட்ட சிலரை நகரின் வெளியே உள்ள ஒரு திடலில் தனித்தனியே அறைகள் அமைக்கப்பட்டுக் காவலில் வைத்தனர்.

அங்கே கப்பிள் வீடியோக்கள் செய்பவர்கள், அஷ்ட கோணலாக முகத்தைப் பதிவிட்டுத் தங்களைப் பாடி ஷேமீங் செய்வதற்கு வழி வகுப்பவர்கள், குழந்தைகளை வயதுக்கு மீறிய வீடியோக்களைப் பதிவிட வற்புறுத்துபவர்கள் என இவ்வாறாகப் பல பிரிவுகளைச் சேர்ந்த பலர் சிறை வைக்கப்பட்டிருந்தனர்.

அவர்களுக்குத் தாங்கள் கொண்ட நோயின் வீரியம் புரியாது; தங்கள் மீது பொறாமை கொண்ட யாரோ ஒருவர்தான் தங்களை அவ்விடம் அடைத்து வைத்திருப்பதாக நினைத்துக்கொண்டு, அறைக்குள்ளேயே கத்தி கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர்.

ஒரு நாள் முழுவதும் அவர்களது கையில் அலைபேசியோ கிங்காங் செயலியை கொடுக்கப்படவில்லை; அனைவரும் தங்களது கூச்சலில் ஓய்ந்து போயினர். தங்களுக்குக் கொடுக்கப்பட்ட உணவைக்கூட உண்ணாமல் தர்ணா செய்யத் தொடங்கினர். தங்களுக்கு அலைபேசி தந்தால் மட்டுமே உணவை எடுத்துக் கொள்வோம் உறுதியாகக் கூறிவிட, “அப்படியா?! அப்படியானால் தாங்கள் அவ்வளவு சிரமத்துடன் உண்ண வேண்டாம்... இவ்வாறே கூச்சலிட்டுக் கொண்டு இருங்கள்...” என வற்புறுத்தாமல் அவ்விடமிருந்து புறப்பட்டு விட்டார் காவல் துறை ஆய்வாளர்.

இப்படியாகப் பல மணிநேரமாக ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருந்த திரைப்படம் திடீரென நிறுத்தப்பட்டது. இவ்வளவு நேரம் ஆர்வமாகத் திரைப்படத்தைக் கண்டுகளித்து, அதனுள்ளே சென்று விடுவதைப் போன்ற திறத்தில் இருந்தவர்களுக்குப் போக்கு தடைபடவும் வெகுண்டெழுந்து விட்டனர்.

சற்று நேரத்திற்கு முன்னர்த் திரைப்படத்தைத் தொடர்ந்து ஒளிபரப்புமாறு பிடிவாதமாகக் கோரிக்கை விடுத்த பெரியவர், “ஏன்டா உங்களுக்குக் கொஞ்சமாச்சு மனசாட்சி இருக்குதா?? படம் எவ்ளோ ஆர்வமா ஓடிட்டு இருந்துது?? எங்க எல்லாரையும் ஒரு கிரவுண்டுல கொண்டந்து போட்டிருக்க மாதிரி அவியளையும் கொண்டு போய்ப் போட்டிருந்தானுவ... என்னதான் நடக்கும்ன்னு பார்த்துட்டு இருந்தோம்.. நல்ல கட்டத்துல போய் ஆ பண்ணி தொலைசிட்டியே...” என எழுந்து கத்தத் தொடங்கிவிட, இம்முறை அனைவருமே அவருக்கு ஆதரவாகக் கூச்சலிடத் தொடங்கி விட்டனர்.

“ஏமியா... படத்தைப் போடுமய்யா... இவ்ளோ தான் இன்னைக்கு, நாளைக்கு வாங்கனு சொல்லிட்டியருன்னா யாரும் வீட்டுக்குப் போவாம இங்கனயே தூங்கிருவோம்.. பாத்துக்கிடும்... வீட்டுல சமைச்சிட்டு இருந்த ஆளுக்களைக் கூட்டிட்டு வந்து படத்தைப் போட்டு காட்டிட்டு ஆர்வமா பார்த்துட்டு இருக்கும் போது பாதியிலேயே போவ சொல்லுதியரு.. நல்லாவா இருக்கு??” எனக் கூட்டத்திலிருந்த சில பெண்கள் குரலை உயர்த்திப் பேச, “பாரேன்..” என ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டனர் பெரியவர்கள்.

ஊர் மக்களின் கூச்சல் அதிகமாவதைப் பார்த்த பஞ்சாயத்து ஊழியர்கள், “ஏ.. சத்தம் போடாதிய.. ஒரு நிமிஷம்.. ஷ்... ஷ்... ஒரு நிமிஷம்... ஒரே ஒரு நிமிஷம்... நான் சொல்லுததை மட்டும் கேட்டுட்டு அடுத்து பேசுங்க...” எனப் பெரும்சிரமப்பட்டுத் தனது கீச்சுக்குரலால் கத்த, சிலர் அதைக் கவனிக்கத் தொடங்க, தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பேசத் தொடங்கிவிட்டார்.

அவர் ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார் என உணர்ந்த மற்றவர்களும் அவர் கூற வருவது யாதெனச் செவிமடுத்து கேட்கத் துவங்கி விட்டனர்.

“இங்க பாருங்க... எபிசொட் எபிசோடா போடணும்னு தான் கவர்மெண்டு சொல்லிருந்துது... நீங்க எல்லாரும் கேட்டதுனால தான் மொத்தமா போடுதோம்... மணி பத்தாச்சுது.. ஆனா இதுக்கு மேலதான் முக்கியமான கட்டம் வரப் போவுது... அதை எல்லாத்தையும் பொறுமையா கேட்டு, மண்டைக்குள்ள ஏத்திக்கணும்ன்னா வெறும் வயித்தோட இருந்தா முடியாது.. அதனால எல்லாரும் முதல்ல சாப்பிட்டுட்டு வாங்க..” என அவர் முழுவதுமாகக் கூறி முடிக்கும் முன்னரே, “அய்யா... ராசா... வீட்டுல சோத்துக்கு உலையைப் போடும் முன்னேயே வீடு வீடா தட்டி கூட்டியாந்துட்டாங்க... இனிமே நாங்க வீட்டுக்குப் போயி, இருட்டுக்குள்ள தடவி தடவி சமையல் பண்ணி சாப்பிட்டுட்டு எப்போ வர??” எனக் குறுக்கிட்டனர் சிலர்.

“யக்கா... முழுசா கேளுங்க... நான் இன்னும் சொல்லியே முடிக்கல... நல்லா சாப்பிட்டுட்டு இருந்தாதான் விழிப்பா அவிய என்ன சொல்ல வாராவன்னு கேக்க முடியும்ம்... அதுக்கு எல்லாரும் முதல்ல சாப்பிடணும்... ஆனா எல்லாரும் வீட்டுக்குப் போயிட்டு வரணும்ன்னா நேராயிரும்... அதான் நம்ம ப்ரெசிடென்ட் அண்ணாச்சி ஓட்டல்ல இருந்து எல்லாருக்கும் சாப்பாடு வாங்கிட்டு வரதுக்கு ஏற்பாடு பண்ணியிருக்காவ... க்ரவுண்ட் கேட்டுல குட்டி யானையில சாப்பாடு வச்சிருக்காங்க... இட்லி, தோசை, சப்பாத்தி, புரோட்டா இருக்கு... ஒரு குடும்பத்துக்கு ஒருத்தர் வாங்க... உங்க வீட்டுக்கு எத்தனை பார்சல் வேணும், என்னென்ன வேணும்ன்னு சொல்லி இங்கே எழுதி கையெழுத்தை போட்டுட்டு சீட்டு வாங்கிட்டு போய் அங்கே போய்ப் பார்சல் வாங்கிக்கோங்க... நாளைக்குக் காலையில பத்து மணிக்கு எல்லார் வீட்டுக்கும் வருவோம்... துட்டை அப்போ வாங்கிக்கிடுதோம்..” என அவர் கூறி முடிக்க, “ச்சேரி... அப்போ ச்சேரி...” என்றனர் அனைவரும்.

அவர் கூறியபடி, அனைவரும் தங்களுக்குத் தேவையான உணவுகளை வாங்கிச் சென்று கும்பல் கும்பலாக அமர்ந்து உண்ணத் தொடங்க, பலருக்கு இது ஒரு விசித்திரமான அனுபவமாக இருந்தது. பெரியவர்களும் நடுத்தர வயதினரும் தங்களது பள்ளிக் காலங்களையும் பால்யக் காலங்களையும் அசைபோட்டனர்.

தொண்ணூறுகளில் பிறந்தவர்களுக்கு இது ஒரு மீண்டும் கிடைக்காத ஒரு அரியவகை நினைவாகிப் போனது. இருபதாம் நூற்றாண்டில் பிறந்து, (ஜெயில்)‘செல்’போன் மட்டுமே அனைத்துமாகிப் போன குழந்தைகளுக்கு, “Its a different experience... thrilling but interesting...”.

இவ்வாறாகச் சிரித்து, சிலிர்த்து, சிலாகித்து உண்டு இரவு உணவை உண்டுவிட்டு மீண்டும் தங்களது இடங்களுக்கே திரும்பியவர்கள், “இந்தச் சத்யா ஏன்கா இப்படிப் பண்ணுதா?? பிள்ளைய, புருஷன்னு எல்லாரும் நல்லாதானே இருக்காவ... பிறகு என்னவாம்??”, “இந்தச் சாரதா என்ன ஆனா?? அவளைக் காட்டவே இல்லையே.. ஒருவேளை எதுவும் அக்சிடென்ட் ஆகி செத்துக் கித்துப் போயிட்டாளோ... கூட வயசுப் பிள்ள வேற இருந்துச்சே... அதை என்ன பண்ணுனாளோ??”, “கண்ணம்மா மூஞ்சியைப் பார்த்தாலே பிடிக்கலம்மா எனக்கு... அவளும் அவளோட பேச்சும்... ஒழுங்கா படிச்சி ஒரு நல்ல வேலைக்குப் போக வேண்டியதுதானே... என்னத்த பேசிட்டு திரியுது??”, “அர்ஜுன் – ரோஜா நல்லாதான் பண்ணுதாவ... ஆனா நாலு சுவத்துக்குள்ள நடக்கதை வெளியே படம் போட்டு காட்டுதது நல்லாவா இருக்கு?? நல்லா இருக்கவியளுக்குச் சரி, கொஞ்சம் வாழ்க்கை சுமாரா இருக்கவியளுக்கு வருத்தமா தான இருக்கும்??, “இந்த வெண்ணிலா அந்தப் பயலை எதுவும் செய்யாம இருக்கணும்.. மத்தவியளுக்கு இந்தப் பிள்ள பரவால்ல...” எனத் தங்களுக்குள் விவாதித்தவாறே வந்து அமர்ந்தனர். அனைவரும் வந்து அமர்ந்த பின்னர்த் திரைப்படம் மீண்டும் தொடர்ந்து ஒளிபரப்பட்டது.
 
Last edited:

22

திரைப்படத்தில்...

‘டக்... டக்...’ என்கிற பூட்ஸ் ஒலியுடன் அவ்விடமிருந்து நகர்ந்த காவல்துறை ஆய்வாளர் அங்கே காவலுக்காக நின்று கொண்டிருந்த துணைக் காவலர்களிடம், “நாதன்... இவங்களைப் பத்திரமா பார்த்துக்கோங்க.. சாப்பாடு, ஸ்நாக்ஸ், ஜூஸ்ன்னு எது கேட்டாலும் வாங்கிக் கொடுங்க.. தப்பித் தவறி கூட ஆண்ட்ராயிட் போனைக் கொடுத்துடாதீங்க... அப்புறம் நம்ம வேலை போயிடும் பார்த்துக்கோங்க...” எனக் கூறிவிட்டுப் பாதிதூரம் வரை சென்றுவிட்டார்.

அதன் பின்னர் என்ன நினைத்தாரோ மீண்டும் அந்தக் காவலர்களிடமே வந்தார். “தம்பிகளா... நீங்க எல்லாரும் ஆன்ட்ராயிட் போன்தானே வச்சிருக்கிறீங்க...” எனக் கேட்க, “ஆமா சார்...” என்றனர் அனைவரும் ஒருசேர.

“எல்லாத்தையும் எடுங்க..” என அவர் கூறவும் அதிர்ந்து விட்டனர் அனைவரும்.

“சார்..” என அவர்கள் தயங்க, “தம்பிகளா.. அவங்க என்ன வேணும்ன்னாலும் சொல்லி உங்க மனசை மாத்துறதுக்கு வாய்ப்பு இருக்குது.. காசுன்னு இல்ல.. சிம்பதி க்ரியேட் பண்ணலாம்.. என்ன வேணாலும் பண்ணலாம்.. அதனால நீங்க உங்க போனைக் கொடுங்க... நான் ஸ்ட்ரிக்ட்ங்கறதால தான் கவர்மென்ட் என்னை இதுக்கு இன்சார்ஜா அப்பாயின் பண்ணியிருக்கிறாங்க.. சாயந்தரம் ஜெனிதா மேடம் வருவாங்க.. அதுவரைக்கும் இவங்களைப் பத்திரமா பார்த்துக்கோங்க போதும்... அதுக்கு அப்புறம் அவங்க எல்லாரையும் டீல் பண்ணிக்குவாங்க... இன்னும் ரெண்டு மூணு பெரிய பெரிய பார்டிகளை அரெஸ்ட் பண்ண போயிருக்கிறாங்க நம்ம டிபார்ட்மென்ட் ஆளுங்க.. அவங்களும் வந்து எதாவது கத்திட்டு இருந்தா நீங்க மனசு மாறிடக் கூடாது இல்லையா.. அதனால தான் சொல்றேன்.. எல்லாரோட போனையும் தாங்க..” என அவர் கண்டிப்புடன் கூற, அனைவரும் தங்களது அலைபேசிகளை எடுத்து அங்கிருந்த மேஜையில் வைத்தனர்.

அவர்கள் வேறேதும் அலைபேசி வைத்திருக்கின்றனரா என மீண்டும் ஒருதடவை சோதித்து, உறுதி செய்து கொண்டவர் தன்னிடமிருந்த பட்டன் கொண்ட அலைபேசியை நாதனிடம் கொடுத்து, “நாதன்... இதுல ஆயிரம் ரூபாய் ரீசார்ஜ் பண்ணியிருக்கிறேன்... சார்ஜ் புல்லா இருக்குது... எப்படியும் ரெண்டு நாளுக்குத் தாக்குப் பிடிக்கும்... ஜெனிதா மேடம் வர்ற வரைக்கும் எதுவா இருந்தாலும் இந்தப் போனையே யூஸ் பண்ணிக்கோங்க... என்கிட்டே பேசுறதா இருந்தாலும் வீட்டாளுங்களுக்குப் பேசுறதா இருந்தாலும் இதிலேயே பேசிக்கலாம்... புரிஞ்சிதா??” எனக் கேட்க, “எஸ் சார்..” எனச் சல்யூட் அடித்தனர் அனைவரும்.

“குட்... கீப் இட் அப்...” எனக் கூறிவிட்டு அவர் சென்றுவிட, “நாதா... என்னடா இவர் ஓவரா பில்டப் பண்ணிட்டு இருக்கிறாரு.. இவங்க என்ன அவ்ளோ பெரிய குத்தமா பண்ணிட்டாங்க?? ஏதோ இன்டர்நேஷனல் லெவல்ல கிரைம் பண்ணிட்ட மாதிரி ஸீன் போட்டுட்டு இருக்கிறாரு.. போன் கொடுக்கக் கூடாதாம்... நாமளும் போன் யூஸ் பண்ணக் கூடாதாம்.. கேட்கவே விசித்திரமா இருக்குது...” எனக் கேட்டான் ஒருவன்.

“என்னவோ.. ஒண்ணும் புரிய மாட்டேங்குது.. ஏதோ சோசியல் ஆக்டிவிஸ்ட் கொடுத்த கம்ப்ளெயிண்ட்டாம்... சிஎம்க்கு வேண்டப்பட்ட ஆளுங்க போல... நமக்கேன் வம்பு?? நாம பாட்டுக்கு வந்த வேலையைப் பார்த்துட்டு அமைதியா இருப்போம்..” என நாதன் பின்வாங்க, “டேய்.. இவங்களைப் பார்த்தா பெருசா சைக்கோ மாதிரி ஒண்ணும் தெரியல... ரொம்பச் சாதாரண ஆளுங்கதான்... கிங்காங் கோஷ்டி... ஒருவேளை அந்த ஆ பேமஸா இருக்கிறதால வேணும்ன்னே இப்படியெல்லாம் பண்றாங்களோ இதுக்குப் பின்னாடி எதுவும் அரசியல் இருக்குமோ??” எனக் கேட்டான் இன்னொருவன்.

“பெரிய ஜேம்ஸ்பாண்ட் அளவுக்குலாம் யோசிக்காத... நமக்குக் கொடுத்தது இந்த வேலை.. அதை மட்டும் செஞ்சிட்டு போவோம்... நமக்கு ஏன் தேவையில்லாத வேலை எல்லாம்...” என அனைவரும் ஜகா வாங்கிவிட, “நீங்க போங்கடா... என்னால சம்பளத்துக்காக மனசாட்சி இல்லாத வேலையெல்லாம் செய்ய முடியாது.. நான் அவங்ககிட்டே என்ன ஏதுன்னு ஒரு வார்த்தையாவது பேசிட்டு வந்துடறேன்.. இல்லைன்னா என் மனசாட்சியே என்னைக் கொன்னுடும்...” என முன்சென்றான் முகுந்த்.

“அதுக்கு மேல உன்னோட விருப்பம்...” என அனைவரும் தத்தமது பணிகளைத் தொடர, முதலில் அவன் சென்று நின்றது, கண்ணம்மாவின் செல் முன்னர்தான்.

“ம்மா... என்னாச்சு?? ஏன் உங்களைப் பிடிச்சிட்டு இங்கே வச்சிருக்கிறீங்க?” என அவன் மெல்லிய குரலில் கேட்க, “பாரதி... வந்துட்டியா?! நீ தானே என் பாரதி... இவனுங்ககிட்டே இருந்து என்னைக் காப்பாத்த வந்துட்ட தானே...” என ஓடி வந்து அவனது கையைப் பற்றிக் கொள்ள முற்பட்டாள் அவள்.

அந்த எதிர்பாராத செய்கையால் பதறிப் போனவன் இரண்டடி பின்னால் நகர, “பாரதி... வா பாரதி... நாம இங்கேயே கல்யாணம் பண்ணிக்கிட்டு ஓடிப் போவோம்..” என அவள் அழைக்க, “ஆத்தீ... நானில்ல...” என அங்கிருந்து நகர்ந்தவன்; அடுத்தச் செல்லை நோக்கிச் சென்றான்.

வாசலிலிருந்த கம்பியின் வழியே உள்ளே உற்றுநோக்க, ஒருவரையும் காணவில்லை. “என்னாச்சு?? யாரையும் காணலை?? ஒருவேளை ஓடிட்டாங்களோ?? அவர் வந்தா எல்லாரையும் சஸ்பென்ட் பண்ணிடுவாரே... அவனுங்க வேற பெரிய கைன்னு சொன்னாங்களே..” எனத் தனக்குள் அஞ்சியவாறே, “ஹலோ... ஹலோ.. யாராவது இருக்கிறீங்களா??” எனக் குரல் கொடுக்க, “நமஸ்தேவுங்கோ...” அறையின் சுற்றுச் சுவரிலிருந்து வெடுக்கெனத் தலையை நீட்டினாள் ‘நமஸ்தேவுங்கோ’ கலா.

இதை எதிர்பார்த்திராதவன்; தடுமாறி கீழே விழுந்துவிட, கொல்லெனச் சிரித்தனர் மற்ற காவலர்கள். “இருங்கடா... வந்து உங்களைக் கவனிச்சுக்கிறேன்...” என மனதிற்குள் கருவியவாறே அங்கிருந்து நகர்ந்தவன்; அடுத்தச் செல்லுக்குள் எட்டிப் பார்க்க, ஒருவன் உள்ளே இறந்து கிடந்தான்.

“அய்யயோ... டேய்... இங்கே வாங்கடா... இவன் செத்துக் கிடக்கிறான்டா... டேய்... இங்க பாருங்கடா...” என முகுந்த் பதற, மற்ற காவலர்களும் பதறியடித்துக் கொண்டு ஓடிவந்தனர்.

“டேய்... சாவியை எடுத்துத் திறங்கடா.. உள்ளே போய் என்னாச்சுன்னு பார்ப்போம்...” என முகுந்த் அவசரப்படுத்த, சற்றே தயங்கினான் நாதன்.

“இப்படி மனசாட்சியையும் மனிதாபிமானத்தையும் அடகு வச்சி சம்பாதிச்சு என்னடா பண்ணப் போறீங்க?? நீங்கல்லாம் என்னதான் மனுஷங்களோ..” எனத் திட்டியவாறே சாவியை எடுத்து வந்து தானே திறந்தான் முகுந்த்.

காவலர் படையே உள்ளே நுழைய, அவனருகே அமர்ந்த முகுந்த், “தம்பி... தம்பி... எழுந்துருடா... தம்பி... டேய்...” என அவனது கன்னத்தைத் தட்ட, ஒருவன் தண்ணீர் எடுத்து வந்தான். இவ்வாறு பதட்டத்துடன் நிகழ்ந்து கொண்டிருக்க, அவனது மார்பு மேலும் கீழும் மெலிதாக ஏறி இறங்குவதைக் கவனித்து விட்டான் நாதன்.

“டேய்... மூச்சு இருக்குதுடா...” என அவன் கூற, இறந்தவன் போலப் படுத்துக் கொண்டிருந்தவன் பெருங்குரலுடன் சிரித்தவாறே எழுந்து அமர்ந்தான்.

“நம்பிட்டீங்களா?! சும்மா பிரான்க் பண்ணுனேன்...” எனக் கூறிவிட்டு அவன் ஓடத் துவங்க, அந்தச் சூழலை கிரகித்துக் கொள்ளவே அனைவருக்கும் சில நொடிகள் பிடித்தது. அதற்குள் அவன் குறிப்பிட்ட கட்டிடத்தைக் கடந்திருந்தான்.

“எல்லாம் உன்னால வந்தது... மனிதாபிமானமாம்...” என முகுந்தைத் திட்டியவாறே அவனைப் பின்தொடர்ந்து ஓடினர் அனைவரும்.

அனைவரும் தற்போதுதான் பணியில் சேர்ந்த இளம்காவலர்களாக இருந்ததால் அவன் அந்த மைதானத்தின் முனையை அடையும் முன்னரே மடக்கிப் பிடித்து விட்டனர்.

தன்னை முட்டாளாக்கி விட்டதற்காக முகுந்த் சினந்து, அவனை அடிக்கப் பாய, “முகுந்தா.. விடு... இப்படித்தான் ஏடாகூடமா எதாவது பண்ணுவாங்கன்னு வேணாம்ன்னு சொன்னேன்.. நீ கேட்டாதானே... இவங்க பண்ற அட்டூழியத்தை அப்பபோ பார்த்திருக்கிறேன்.. பேஸ்புக் டிவியில வந்துச்சு... அதான் அப்பவே சொன்னேன்.. சரி விடு.. பார்த்துக்கலாம்...” என அவனைத் தடுத்து, கைதியை அழைத்து வந்து குறிப்பிட்ட செல்லில் அடைத்து விட்டனர்.

அவர்கள் அவனை அடைத்து வந்த அடுத்த நொடியே ஐந்தாறு ஜீப்புகள் தொடர்ச்சியாக வரும் ஓசை கேட்டது. “ச்சே... இப்போதான் ரெஸ்ட் எடுக்கலாம்ன்னு நெனச்சோம்... அதுக்குள்ளே வந்துட்டாங்க... எல்லாம் உன்னால வந்தது...” என அனைவரும் முகுந்தை கடிந்து கொண்டனர்.

அங்கே நான்கு பேரை கண்களைக் கட்டி அழைத்து வந்தனர். “ஹலோ... என்னை எங்கே கூட்டிட்டுப் போறீங்க?? நான் எவ்ளோ பெரிய அல்ட்ரா மாடல் தெரியுமா? என்னோட ரேன்ஜ் என்னனு தெரிஞ்சா இப்படியெல்லாம் பண்ணவே மாட்டீங்க... ஒரு பொண்ணுக்கு இந்த நாட்டுல பாதுகாப்பே இல்லையா?? உங்களை மாதிரி ஆளுங்க இருக்கிறதாலதான் நாட்டுல மழையே பெய்ய மாட்டுது... நெல்லும் சரியா விளைய மாட்டுது...” என ஒருவள் கத்திக் கொண்டே வர, “யாருய்யா இது... சரியான க்ரிஞ்சா பேசிட்டு வருது??” எனத் தங்களுக்குள் கேட்டுக் கொண்டனர் காவலர்கள்.

“இவங்களைத் தெரியாதா??! இவங்கதான் உலகத்தின் சிறந்த அல்ட்ரா மாடல் ஹீரா மிதுன்... உலகத்துல இருக்கிற எல்லாரும் இவங்களைப் பார்த்துதான் காப்பியடிக்கிறாங்கன்னு அப்பப்போ ட்வீட் போட்டு ஏதாவது க்ரிஞ்சா அட்டென்ஷன் சீக் பண்ணிட்டு இருப்பாங்க....” என ஒருவன் கூற, அனைவரும் சத்தமாகச் சிரித்து விட்டனர்.

கணவன் – மனைவி இருவரும் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட, “பாருங்கடா.. இவங்கதான் செலிபிரிட்டி கப்பிள்... உலகத்துல இருக்கிற அத்தனை கெட்ட வார்த்தைக்கும் காப்பி ரைட் வாங்கினது இவன்தான்.. அந்தம்மா ஜாடிக்கேத்த மூடி...” என்றான் ஒருவன். அவன் கூறியதற்கேற்ப அழைத்து வரப்பட்டவனது மனைவியும், “என்னங்க நெனச்சிட்டு இருக்கிறீங்க?? என் ஹஸ்பன்ட் எவ்ளோ பெரிய ஹார்ட் ஒர்க்கர் தெரியுமா?? ஒருநாளுக்கு ஒரு மணிநேரம்தான் தூங்குவார்... மத்த நேரம் எல்லாம் தூங்காம உழைச்சுதான் கார் எல்லாம் வாங்கியிருக்கிறோம்... என்ன தேவையில்லாம பேசுறீங்க? எங்ககிட்டே சொகுசு கார் அப்படிங்கறது கிடையவே கிடையாது... எங்ககிட்டே மூணே மூணு ஆடி கார் மட்டும்தான் இருக்குது.. மத்தபடி சொகுசு கார் எங்ககிட்டே இல்லவே இல்ல...” எனக் கூவி கொண்டே செல்ல, ஒருவரையொருவர் பார்த்து நமட்டுச் சிரிப்புச் சிரித்துக் கொண்டனர்.

அடுத்து வந்த பெண் அமைதியாக நடக்க, “சும்மாவா சொன்னாங்க... ஊமை ஊரைக் கெடுக்கும் பெருச்சாளி வீட்டைக் கெடுக்கும்ன்னு...” எனத் தோன்றியது அனைவருக்கும்.

இவர்கள் அனைவரும் வேலையில் சதா பிஸியாக இருப்பதால் இதுபோன்ற கேலிக்கூத்துகளை எல்லாம் பார்த்திருக்க வாய்ப்பில்லை. அதனால்தான் தங்களுக்குள் விவாதித்துக் கொண்டிருக்கின்றனர்.

அழைத்து வந்திருந்த நால்வரையும் தனித்தனி சிறையில் அடைத்த பின்னர்க் காவலர் குழுமத்திடம் வந்த காவல் ஆய்வாளர் அனைவரையும் கவனமாகக் கண்காணித்துக் கொள்ளுமாறு கூறிவிட்டுச் சென்றார்.

அடுத்த இரண்டு மணிநேரத்தில் அவ்வப்போது அங்கிருந்த அனைவரிடமும் உண்பதற்கு ஏதாவது வேண்டுமா என வினவ, அனைவரும் எதுவும் வேண்டாமெனவும் தங்களுக்கு அலைபேசி தந்தால் போதுமெனவும் கூறிவிட, அதற்குமேல் தொந்தரவு செய்யாமல் விட்டுவிட்டனர் காவல்துறை அன்பர்கள்.

சில மணிநேரத்திலேயே வெண்ணிலாவும், சாரதா மற்றும் வெண்பாவும் அழைத்து வரப்பட்டிருந்தனர். நேரமாக ஆக அனைவரது கூச்சலும் அதிகமாகியதே தவிரக் குறைந்தபாடில்லை. ஆகவே காவலர் அனைவரும் பத்திரமாக வெளியே வந்து நின்று கொண்டனர்.

இரவு முழுவதும் அவர்களின் ஓலத்திலேயே கழிய, எப்போதும் ஓய்வு நேரங்களில் அலைபேசியிலேயே நேரம் செலவிடும் நாதன், முகுந்த் மற்றும் தோழர்கள் இப்போது அலைபேசி எதுவும் கைவசம் இல்லாத காரணத்தால் தங்களுக்குள் பேசியவாறே விழித்திருந்தனர். அடைத்து வைக்கப்பட்டிருந்தவர்களின் லீலைகள் குறித்துத் தங்களுக்குள் பேசி சிரித்துக் கொண்டு நேரத்தைக் கழித்தனர். அது ஒரு விசித்திரமான அனுபவமாக இருந்தது.

இரவு மணிக்கொரு முறை அழைத்துப் பேசிய காவல் ஆய்வாளர்; அனைவரையும் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுமாறும் அது அரசின் நேரடி கவனத்தின் கீழே நிறைவேற்றப்படும் அதிமுக்கியமானதொரு மிஷன் எனவும் அறிவுறுத்திக் கொண்டே இருந்தார்.

ஒருவாறாக இரவு கழிந்து, கதிரவனின் ஒளிக்கதிர்கள் பிரவாகிக்கத் தொடங்க, கிழக்கு வெளுத்தது. சோர்வில் தூங்கிப் போயிருந்த அனைவரும் விடிந்து விட்டதை அறிந்து கூச்சலிடத் தொடங்கிவிட்டனர்.

அப்போது ஐந்தாறு அரசு வாகனங்கள் கட்டடத்தின் முன்வந்து நின்றன. அவற்றிலிருந்து அரசு அதிகாரிகள் இறங்க, கடைசியாக நின்ற வாகனத்திலிருந்து இறங்கினார் நாட்டின் தலைசிறந்த மனோதத்துவ நிபுணர் டாக்டர்.ஜெனிதா.

அவர் நிகழ்த்தப் போகும் வரலாற்றுச் சிறப்புமிக்கச் செயலுக்குத் தேவையான அனைத்து பொருள்களையும் உடனிருந்த அதிகாரிகள் கைகளில் பத்திரமாக ஏந்தி நிற்க, “போகலாம்...” என்றவாறே கம்பீரத்துடன் உள்ளே நுழைந்தார்.
 
Last edited:

23

சம்பந்தப்பட்ட நபர்கள் அடைக்கப்பட்டிருந்த ஒவ்வொரு அறையாகக் கடந்தவர், காவல்துறை அதிகாரியிடம் “சார்... இவங்க ஏதாவது சாப்பிட்டாங்களா??” என வினவ, “எதாவது சாப்பிட்டாங்களா??” என நாதனைப் பார்த்தார் அவர்.

“இல்லை சார்... நெறைய தடவை கேட்டோம்... எதுவும் வேணாம்ன்னு சொல்லிட்டாங்க... போன் மட்டும் தந்தாப் போதும், சாப்பாடே வேணாம்ன்னு கூச்சல் போட்டுட்டு இருந்தாங்க..” என அவன் கூற, இதழோரம் மெலிதாகக் கேலிப்புன்னகை ஒன்றை உதிர்த்துவிட்டு நடந்தனர் ஜெனிதாவும் அதிகாரியான ஜுபினும்.

“இவங்களை மாதிரி ஆளுங்களை என்ன பண்றதுன்னே தெரியல ஜெனிதா... சாப்பாடே வேணாம்ன்னு சொல்றாங்க அப்படின்னா எவ்ளோ திமிர் இருக்கணும்?? அப்படி என்னதான் இருக்குதோ அந்த வீடியோல?? இப்போ இவங்க பேன் பேன்னு பரிதவிக்கிற யாரும் இவன்களுக்காகச் சாப்பிடாம தூங்காம் உக்கார்ந்து வெயிட் பண்ணிட்டு இருக்கப் போறது கிடையாது.. வீடியோ வருதான்னு வெயிட் பண்ணி பார்ப்பாங்க... ரெண்டு மூணு தடவை ஓபன் பண்ணி செக் பண்ணுவாங்க.. வரலையா க்ளோஸ் பண்ணிட்டு போய்டுவாங்க இல்ல அடுத்த வீடியோவைப் பார்க்க போயிருக்கிறாங்க..” என ஜுபின் கூற, “இதெல்லாம் தெரிஞ்சா இவங்க ஏன் சார் இங்கே இருக்கப் போறாங்க?? இவங்களைச் சொல்லி தப்பில்ல... எல்லாம் இவங்களோட சூழ்நிலை, நாம வாழற சொசைட்டி, சுத்தி இருக்கிற மக்கள் எல்லாமே தான் காரணம்..” என விரக்தியாகப் பேசினார் ஜெனிதா.

“புரியுது மேடம்... இவங்களை எப்படி டீல் பண்ணப் போறீங்க? ஷாக் ட்ரீட்மென்ட் எதாவது கொடுக்கப் போறீங்களா இல்ல வேற எதாவது புது டெக்னாலஜி மூலமா கவுன்சலிங் கொடுக்கப் போறீங்களா??” என்ற ஜுபினின் கேள்விக்கு எதுவும் பேசாமல் மென்னகை ஒன்றை உதிர்த்துவிட்டு நடந்தார் ஜெனிதா.

“என்ன மேம்? என்ன சிரிக்கிறீங்க??” என ஜுபின் ஒன்றும் புரியாமல் வினவ, “நான் இவங்களை எதுவும் பண்ணப் போறதில்ல சார்... ஜஸ்ட் அவங்க வீடியோசை அவங்களைப் பார்க்க வைக்கப் போறேன்.. அவ்ளோதான்... அந்த வீடியோக்களோட தாக்கம், அதோட இன்னொரு பக்கத்தைக் காட்டப் போறேன்.. அவ்ளோதான்.. வேற எதுவும் பெருசா பண்ணப் போறதில்ல... மிஷன் வச்சு அக்கம்ப்ளிஷ் பண்ற அளவுக்கு இவங்க எல்லாம் தேசத்துரோகிகள், சைக்கோ கில்லர்சும் இல்ல... ஜஸ்ட் ஒரு கியூரியாசிட்டியில உள்ளே வந்து அறியாம மாட்டிக்கிட்டு வெளியே வர முடியாம தவிக்கிறவங்க... சோ இந்தச் சிம்பிள் ட்ரீட்மென்ட் போதும்ன்னு நெனைக்கிறேன்...” எனக் கூறிவிட்டு அங்கிருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்தார் அவர்.

“ஜுபின்... எல்லாருக்கும் சாப்பாடு வாங்கிட்டு வர சொல்லுங்க... அவங்க எப்படியும் இப்போதைக்குச் சாப்பிட மாட்டாங்க.. ஆனா டயர்டாகி நமக்குப் பசிக்கும் இல்லையா?!” என ஜெனிதா கூறவும், “டயர்டாகி என்றால்?! ஒருவேளை லத்தியால் அனைவரையும் தாக்கப் போகிறாரா??” என்பதாகச் சந்தேகத்துடன் பார்த்தார் ஜுபின்.

“ச்சில் ஜுபின்.. நான் சைக்கியார்டிஸ்ட்.. அவ்ளோ ஹார்ஷா நடந்துக்க மாட்டேன்.. இங்கே டயர்டாகும்ன்னு சொன்னதுக்கான ரீசன் அவங்க பண்ணப் போற கூத்துகளை வேடிக்கை பார்க்கணுமே.. அதைத் தான் சொன்னேன்..” என ஜெனிதா மெலிதாகப் புன்னகைக்க, அவர் கூறியவாறே அனைவருக்கும் உணவு எடுத்து வரப்பட்டது.

உணவு வருவதற்கான இடைவேளையில் ஒவ்வொரு அறையின் முன்னரும் சென்று நின்ற ஜெனிதா, “ஹாய்... எப்படி இருக்கிறீங்க??” என்க, ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் ரியாக்ட் செய்தனர்.

ஒருவர் ‘நமஸ்தேவுங்கோ..’ எனக் கூறிப் பயமுறுத்தினால், மற்றொருவர் பாரதியை என்னிடம் மீட்டுக் கொண்டு என மன்றாடினார். ஒருவர் நாங்கள் செய்த தவறென்ன, எதற்காக எங்களை இவ்விடம் அடைத்து வைத்திருக்கின்றீர்கள் எனக் கூறி வாதத்தில் ஈடுபட, மற்றொருவர் கத்தி கூச்சலிடத் தொடங்கிவிட்டார். அனைவர்க்கும் அல்டிமேட்டாக ஒருவர், “நான் யாரு தெரியுமா?? நான் அல்ட்ரா மாடல்... இப்போ நீங்க என்னை இங்கே கடத்தி வச்சிருக்கிறது தெரிஞ்சா டில்லியே ஆட்டம் காணோம்... எனக்காகப் பிரதமரே சாப்பிடாம விரதமிருந்து வேண்டிக்குவாரு...” எனப் பிதற்றத் தொடங்கிவிட, அதற்குமேல் ஜெனிதாவால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

தனியே வந்தவர்; ஆசை தீரும்வரை சிரித்துத் தீர்க்க, உணவு வந்துவிட்டது. ஜெனிதா, ஜுபின், நாதன், முகுந்த் மற்றும் இதரபிற காவலர்கள், அரசு அலுவலர்கள், அதிகாரிகள் என அனைவரும் ஒன்றாக வட்டமாகத் தரையில் அமர்ந்து உண்ண, அடைக்கப்பட்டிருந்த அனைவரும் பெருங்குரலெடுத்து கதறத் துவங்கிவிட்டனர்.

அவர்களின் ஓலம் காதுகளைக் கிழிக்க, “இன்னும் கொஞ்ச நேரம்தான் சார்.. அப்புறம் அவங்களே ஆட்டமேட்டிக்கா அமைதியாகிடுவாங்க... சீக்கிரமா சாப்பிடுங்க...” என அறிவுறுத்தினார் ஜெனிதா.

அனைவரும் விரைந்து உண்டு முடிக்க, சிலரை அழைத்து அந்தக் கூடத்தின் அறையில் ஒரு திரையையும் அதனருகே ப்ரொஜக்டரையும் பொருத்த உத்தரவிட்டாள். அறைகள் அமைந்திருக்கும் நடுநாயகமாகச் சென்று நின்று கொண்டவள்; சற்றே குரலை உயர்த்திப் பேசத் தொடங்கினாள்.

“ஹாய் கைஸ்... என்னை உங்களுக்குத் தெரியாது.. பட் உங்க எல்லாரையும் எனக்குத் தெரியும்... நான் உங்க எல்லாரோடவும் பெரிய பேன்... ஒரு வீடியோகூட விடாம பார்த்துடுவேன்.. அவ்ளோ தீவிர ரசிகை.. உங்க எல்லாரையும் பெருமைப்படுத்துற விதமா ஒரு ட்ரிபியூட் வீடியோ ரெடி பண்ணிட்டு வந்திருக்கிறேன்... அதைப் பார்க்கணும் அப்படின்னா எல்லாரும் முதல்ல சாப்பிடனும்.. அப்போதான் அந்த வீடியோவை காட்டுவேன்.. வீடியோ பார்த்துட்டு எல்லாரும் போய்ச் சேர்ந்துடுவீங்க... ஐ மீன் வீட்டுக்குப் போய்டலாம்... சோ முதல்ல எல்லாரும் சாப்பிடறீங்களா?? சாப்பிட்டீங்க அப்படின்னா சீக்கிரம் வீடியோவை பார்த்துட்டு அவரவர் வீட்டுக்குப் போய் அடுத்த வீடியோ போடலாம்.. இல்லைன்னா இங்கேயே கத்திட்டு இருக்க வேண்டியதுதான்.. என்ன சொல்றீங்க??” என அவள் கேட்க, அனைவரும் ஒரு சேர, “வாக்கு மாற மாட்டீங்களே...” என வினவினர்.

“அதெல்லாம் மாற மாட்டேன்.. ஒருவேளை நான் சொன்னதைச் செய்யலை அப்படின்னா என்மேல கேஸ் போட்டுக்கோங்க... விசிட்டிங் கார்டு, அட்ரெஸ் கூடத் தர்றேன்...” என ஜெனிதா கூறவும்தான் அனைவருக்கும் கொஞ்சம் நம்பிக்கை பிறந்தது. எனவே உண்பதற்கு ஒப்புக் கொள்ள, அவரவர் அறைக்கே உணவு பார்சலில் கொடுக்கப்பட்டது.

உள்ளேயே கைகழுவி கொள்ளத் தண்ணீரும், பருகுவதற்கான தண்ணீரும் வழங்கப்பட, அனைவரும் உண்டுமுடித்தனர். வெகுநேரம் பசியுடன் கூச்சலிட்டுக் கொண்டிருந்தவர்கள்; இப்போது உணவைக் கண்டது சற்றே ஆசுவாசமடைந்து ஆன்மாவை இளைப்பாற்றுவதற்காக உண்டனர். அனைவரது கண்களிலும் ஒரு ஆத்ம திருப்தி தெரிந்தது.

அனைவரும் அடைக்கப்பட்டிருந்த அறையைத் திறக்குமாறு உத்தரவிட்ட ஜெனிதா, ப்ரொஜக்டர் பொருத்தப்பட்டிருந்த அறைக்கு அழைத்து வருமாறு பணித்தாள்.

(Disclaimer : இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் காணொளிகளின் சாராம்சம் அனைத்தும், அவற்றில் பிரயோகம் செய்யப்பட்டிருக்கும் வார்த்தைகளும் பிரச்சனையின் தீவிரத்தையும் வீரியத்தையும் உணர்த்தும் நோக்கிலேயே சேர்க்கப்பட்டவை. சமுதாய அக்கறையேயன்றி வேறெதுவுமில்லை.)

கிட்டத்தட்ட இருபதிற்கும் மேற்பட்டோர் அந்தக் கூடத்தில் அமர வைக்கப்பட்டிருக்க, காவலர்கள் புடைசூழ உள்ளே நுழைந்த ஜெனிதா; காவலர்களைச் சுற்றிலும் அரணாக அமர்ந்திருக்குமாறு கூறிவிட்டு நடுவில் வந்து அமர்ந்தாள்.

தன்னுடன் எடுத்து வந்திருந்த பென்ட்ரைவை கொடுத்து அதில் இருந்த குறிப்பிட்ட காணொளி ஒன்றை ஓட விடுமாறு கூறினார்.

முதல் காட்சியிலேயே அர்ஜுனும் ரோஜாவும் காட்டப்பட, இதுகாறும் பிரித்து வைக்கப்பட்டிருந்த இருவரும் ஒருவரையொருவர் காதலுடன் நோக்கிக் கொண்டனர்.

இன்னும் அங்கே இருந்த சில திருமணமான / காதல் ஜோடிகளும், ஜோடியாக வீடியோக்கள் பதிவிடுவோரும் தாங்களும் அந்தக் காணொளியில் காட்டப்படுவோம் என்னும் ஆர்வத்தில் கண்கள் மின்ன அமர்ந்திருந்தனர்.

• முதல் காணொளியாகக் காதல் கல்யாணம் Vs நிச்சயக்கப்பட்ட திருமணம் என வித்தியாசத்தைக் காட்சிப்படுத்தும் வகையிலான காணொளி : பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் எனில் முதலிரவு அறைக்குள் சென்றதும் தயக்கத்துடன் அமர்ந்திருப்பராம். காதல் திருமணம் என்றால் வெகு இயல்பாக உரையாடிக் கொண்டிருப்பராம். இதற்குப் பின்னணியில் சுதி சேர்க்கும் வகையில், “தேவர் மகன்” திரைப்படத்தில் இடம்பெறும் “இஞ்சி இடுப்பழகா..” பாடலும், பின்னதான காணொளிக்கு அதே பாடலை ரீமிக்ஸ் செய்த ஆடியோவும் இணைத்திருந்தனர்.

இதைப் பார்த்த ஜுபின் அவர்களை ஒருமாதிரியாகப் பார்க்க, அவர்கள் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அடுத்தக் காணொளியைக் காணும் ஆர்வத்தில் அமர்ந்திருந்தனர்.

• அடுத்ததாக “சுந்தரி நீயும்... சுந்தரன் நானும்... சேர்ந்திருந்தால் திருவோணம்...” எனப் பாடல் ஒலிக்க, இருவரும் சற்றே நெருக்கமாக அமர்ந்து ஒருவருக்கு ஒருவர் உணவை ஊட்டி, காதலைப் பரிமாறிக் கொண்டிருந்தனர்.

• அடுத்த காணொளியில், சமைத்துக் கொண்டிருக்கும் ரோஜாவை பின்னாலிருந்து அணைத்துக் கொள்கிறான் அர்ஜுன். துணிகளைத் துவைக்கும் போதும் அவளுக்கு உறுதுணையாக இருக்கிறான். “ஞாயிறு மதியம் சமையல் உனது... விரும்பி நீ சமைத்திடுவாய்.. வேடிக்கை பாரென என்னை அமர்த்தித் துணிகளும் துவைத்திடுவாய்..” என்னும் பாடலுக்கு இதைக் காட்சிபடுத்தியிருந்தனர்.

• இதே காணொளிக்கு, “நான் சமையல் செய்திடுவேன்... நீ வந்து அணைத்திடுவாய்...” என்னும் பாடலையும் இணைத்துப் பதிவேற்றியிருக்க,

நாதன் அவர்களைப் பார்த்து சற்றே எள்ளலாக நகைத்தான். இதைப் பார்த்துவிட்ட அர்ஜுன், பதிலுக்கு முறைத்துவிட்டு, “ஹலோ... மக்கள் விரும்புனாங்க, நாங்க அப்லோட் பண்ணினோம்.. இதுல எங்களைப் பார்த்து நக்கலா சிரிக்க வேண்டிய அவசியம் இல்ல...” எனக் கூறிக்கொண்டிருக்கும் போதே, மற்றொரு ஜோடியின் காணொளி வந்துவிட்டது.

• “கோவிலிலே நான் தொழுதேன்... கோலமயில் உனைச் சேர்ந்திடவே... கோடிமுறை நான் தொழுதேன்... காலமெல்லாம் நீ வாழ்ந்திடவே...” என்னும் வரிகளுக்கான காட்சி அது. கோவிலுக்குச் சென்றிருக்கின்றனர் குறிப்பிட்ட தம்பதியர். அர்ச்சனை முடிந்ததும் அர்ச்சகர் இருவருக்கும் விபூதி மற்றும் குங்குமம் அளிக்க, அந்தப் பெண் மற்றும் பெற்றுக் கொண்டு தனது நெற்றியில் பூசிக் கொள்கிறார். “ஏய்... எனக்கு வச்சி விடு..” என அந்த ஆடவன் கேட்க, தனது மோதிர விரலில் விபூதியை எடுக்க முற்பட்டவளைத் தடுத்தவன்; அவளது நெற்றியில் தனது நெற்றியைப் பதித்து ‘நீ பாதி; நான் பாதிக் கண்ணே...’ ஆகி விட்டனர்.

• அந்தப் பெண் உணவை உண்டு கொண்டிருக்கிறாள்; அவள் கணவனும் குழந்தைகளும் அருகிலேயே அமர்ந்து உண்டு கொண்டிருக்கின்றனர். குழந்தைகள் அறியாவண்ணம், “எனக்கு ஊட்டிவிடு...” என ஜாடையால் கேட்கிறான் அவன். “போங்க... முடியாது... குழந்தைகள் இருக்கிறாங்க...” என அவள் தவிர்க்க, “ப்ளீஸ்டி...” எனக் கண்களாலேயே கெஞ்சுகிறான் கணவன். வேறுவழியின்றி, சமையலறைக்குச் சென்று உப்பை எடுத்து வருமாறு குழந்தையைப் பணித்துவிட்டு, அந்த இடைவேளையில் தன் கணவனுக்கு ஊட்டி விடுகிறாள் அவள்.

“இதெல்லாம் எவ்வளவு பெரிய அசிங்கம் தெரியுமா??” என மனதிற்குள் நினைத்துக் கொண்ட முகுந்த் அமைதியாக அமர்ந்திருக்க, அவர்களோ அசருவதாகத் தெரியவில்லை.

அடுத்ததாகக் கல்லூரி மாணவர்கள் போன்ற தோற்றத்தில் ஒரு ஜோடி அமர்ந்திருக்க, அவர்களது காணொளி ஒளிபரப்பப்பட்டது.

• கையில் ‘லேஸ்’ பாக்கெட்டை சுவைத்துக் கொண்டிருக்கின்றாள் அந்தக் காதலி. அவளிடமிருந்து பாக்கெட்டைப் பறித்துக் கொண்டவன்; “எனக்கும் கொடுடி...” என்பதாகக் கேட்க, தன் பற்களுக்கு இடையில் அந்தக் குறிப்பிட்ட லேஸ் துண்டின் ஒரு பாதியை வைத்துக் கொண்டு மற்றொரு பாதியை அவனுக்கு நீட்ட அவனும் அவ்விதமாகவே பெற்றுக் கொள்கிறான். இத்தனைக்கும் இவை அனைத்தும் நடப்பது பொது வெளியில், பொழுது போக்குப் பூங்காவில்.

இந்தக் காணொளியைப் பார்த்ததும் அதற்குமேல் ஜீரணிக்க இயலாதவனாக வெளியே சென்று வாயைக் கொப்பளித்துவிட்டு, முகத்தைக் கழுவி கொண்டு வந்து அமர்ந்தான் நாதன்.

• ஒரு குடும்ப விழாவில் கணவனும் மனைவியும் அருகருகே அமர்ந்திருக்கின்றனர். மனைவி கையில் ஐஸ்கிரீம் வைத்து சுவைத்துக் கொண்டிருக்கிறாள். யாரோ ஏதோ வினவ, அவள் பதிலளிக்க முற்பட்ட அந்தக் குறுகிய இடைவேளையில் அவளது கையிலிருந்த ஐஸ் கிரீமை ருசி பார்க்கிறான் கணவன். இதைத் தெரிந்து கொண்டவள் வெட்கத்தில் நெளிந்தவாறே அவனது தோளில் இடிக்கிறாள்.

“கொரில்லா செல்லைவிட மோசமானவங்களா இருப்பாங்க போலயே... நான் வேற சிங்கிள்டா...” என நாதனும் முகுந்தும் தங்களுக்குள் முணுமுணுத்துக் கொள்ள, “ஏன்டா இப்படியெல்லாமா அப்லோட் பண்ணுவாங்க?? பார்க்கவே நாராசமா இருக்குதே.. இவங்கல்லாம் தன்னோட வீடியோவை தானே ஒருதடவை கூட ப்ளே பண்ணி பார்க்க மாட்டாங்களா?” எனச் சந்தேகமாகக் கேட்டான் ஒருவன்.

“அப்படி ப்ளே பண்ணி பார்த்திருந்தா இவனுங்க ஏன் இங்க வந்திருக்கப் போறாங்க, நாம ஏன் இப்படி ராப்பகலா காவலுக்குக் கிடக்கப் போறோம்..” என அலுத்துக் கொண்டான் மற்றவன்.

• கணவனோ (அ) காதலனோ மனைவி (அ) காதலி அருகில் இருக்கையில் அலைபேசியிலேயே கண்களைப் பதித்திருக்கிறான். அமைதியாக, சோகமாக அமர்ந்து பொறுத்துப் பொறுத்துப் பார்த்த பெண்ணானவள்; சற்றே சாய்ந்து அவனது மடியில் படுத்துக் கொள்ள, அப்போதுதான் தவறை உணர்ந்தவனாக அவளைப் பார்க்கிறான் ஆடவன். தன் கையில் வைத்திருந்த அலைபேசியை ஒரமாக வீசிவிட்டு அவளை அணைத்து நெற்றியில் இதழ் பதிக்கிறான் அவன்.

இதைப் பார்த்த அனைவருக்குமே சிரிப்பு முட்டிக்கொண்டு வந்தாலும் அமைதியாக அமர்ந்திருந்தனர்.

• கணவன் மடிக்கணினியில் அலுவலக வேலைகளைக் கவனித்துக் கொண்டிருக்கின்றான். அருகில் படுத்திருந்த மனைவி அலைபேசியில் கேம் விளையாடிக் கொண்டிருக்கிறாள். குறிப்பிட்ட லெவலில் தோற்றுவிட்ட பிறகே தன் கணவன் அருகில் இருப்பது அவளுக்கு நினைவு வருகிறது. அவனைத் தொந்தரவு செய்யும் பொருட்டு, அவனது மடிக்கணினி விசைப்பலகையில் காலை வைத்துத் தொந்தரவு செய்ய முற்படுகிறாள் அவள்.

சற்றே எரிச்சலுற்றவன் அவளது காலைத் தள்ளிவிட, அவனது தோளில் வைக்கிறாள் அவள். அவனும் சற்றே கோபம் தணிந்தவனாக மடிக்கணினியை மூடிவைத்துவிட்டு அருகில் படுத்துக் கொள்கிறான்.

• மனைவி கணவனுக்கு எண்ணெய் தேய்த்துவிடுகிறாள்; அவனது கைக்கு எண்ணெய் தேய்க்க முற்படுகையில் அவளது கையைப் பற்றி இழுத்து முத்தமிடுகிறான் அவன்.

• தூங்கி விழித்த கணவன் அருகில் மனைவியைக் காணாததால் அவளைத் தேடிக் கொண்டு சமையலறைக்கு வருகிறான். அவள் அங்கே ஆர்வமாகச் சமைத்துக் கொண்டிருக்க, தன் கையில் வைத்திருந்த தாலியை எடுத்துக் காட்டுகிறான். அதைப் பார்த்ததும், “அய்ய...” என அவள் நாக்கைக் கடித்துக் கொண்டு நாணத்தால் திரும்பிக் கொள்ள, ‘நெஞ்சினிலே.. நெஞ்சினிலே...’ என்னும் பாடல் ஒலிக்க, மீண்டும் அவளது கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவித்து விடுகிறான் அவன். இருவரும் காதலுடன் ஒருவரையொருவர் அணைத்துக் கொள்கின்றனர்.

• கணவன் குளித்துக் கொண்டிருக்கிறான். அவன் குளித்துவிட்டு உடலைத் துடைத்துக் கொள்வதற்காகத் துண்டைக் கேட்கிறான். மனைவி அதை எடுத்துக் கொண்டு சென்று கதவைத் தட்ட, அவன் கதவைத் திறக்க, அவள் கண்களை மூடிக் கொள்கிறாள். சற்றே வெட்கத்தில் நெளிந்தவன் துண்டோடு சேர்த்து அவளையும் குளியலறைக்குள் இழுத்துக் கொள்கிறான்.

இந்தக் காணொளியைப் பார்த்ததும் அதற்குமேல் சகித்துக் கொள்ள முடியவில்லை அனைவராலும். ஆனாலும் உயரதிகாரியான ஜெனிதாவிற்குப் பயந்து, அவளது பதவிக்கு மரியாதை கொடுத்து அனைவரும் அமைதியா அமர்ந்திருக்க, கைது செய்து அழைத்து வரப்பட்டிருந்த கும்பலில் ஒருத்தியான வெண்ணிலா எழுந்து கொண்டாள்.

எழுந்து சென்றவள்; ஓடிக் கொண்டிருந்த காணொளியை பாதியில் நிறுத்தி விட்டாள். கோபமாக அந்தக் கப்பிள் வீடியோ செய்யும் கும்பலிடம் திரும்பியவள்; “என்னங்க பண்ணி வச்சிருக்கிறீங்க?? நாலு சுவத்துக்குள்ள பண்ண வேண்டிய விஷயத்தை இப்படித்தான் பப்ப்ளிகா வீடியோ எடுத்துப் போஸ்ட் பண்ணுவீங்களா?? இதெல்லாம் பத்திரமா பொக்கிஷமா பாதுகாத்து வைக்க வேண்டிய ப்ரைவேசி திங்க்ஸ்... எல்லாரும் பார்க்கிறாங்க அப்படிங்கறதுக்காக என்ன வேணா பேசலாமா?? எல்லாத்துக்கும் ஒரு வரைமுறை வேணாமா?? சின்னப் பசங்க யாராவது இதைப் பார்த்துட்டா என்ன ஆகுறது? அவங்க மனசு நஞ்சாகிடுமே.. வருங்காலச் சந்ததியே நாசமாகிடுமே...” எனக் கத்தத் தொடங்க, ஜெனிதாவும் ஜுபினும் ஒருவரையொருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டனர்.

அவர்களது திட்டமே இதுதானே!! ‘கத்தியின்றி ரத்தமின்றி வரும் யுத்தம்’ போல ‘அரைப்பக்க அளவிற்கு அறிவுரை இன்றி, எந்த எபோர்டுகளும் இன்றி’ இனிதே திட்டம் நிறைவேறத் தொடங்கியது.

தங்களது திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு ஏற்ற விதமாக வெண்ணிலா தயாராக இருக்கிறாள் என்பதை யூகித்துக் கொண்டவர்கள்; அடுத்ததான அஸ்திரத்தை எய்யத் தயாராகினர்.
 
Last edited:

24

ஜெனிதா ஜுபினுக்குக் கண்களால் ஜாடைசெய்ய, எழுந்து வெண்ணிலாவை நோக்கிச் சென்றான் அவன். “மேம்... நீங்க உக்காருங்க முதல்ல.. டென்ஷன் ஆகாதீங்க மேம்... எதுவா இருந்தாலும் பாதியிலேயே கருத்து சொல்லாதீங்க... பாதிக்கு அப்புறம் என்ன வேணாலும் நடக்கலாம் இல்லையா?! நீங்க உக்காருங்க.. முழுசா பார்த்துட்டு பேசுங்க மேம்...” என அவளைச் சமாதானம் செய்து அமர வைத்தவன்; அந்த ஆப்பரேட்டரிடம் வேறொரு கோப்பை ஒப்பன் செய்யுமாறு கூறினான்.

அந்தக் காணொளியில் தோன்றுபவர்கள் அனைவரும் புதிதாகத் திருமணமானவர்கள். அதிலும் இருபது முதல் இருபத்து மூன்று வயதான இளம் தம்பதிகள்.

அவர்களைப் பார்க்கையில் ‘அவன் இவன்’ திரைப்படத்தில் ஆர்யாவை வர்ணிப்பதற்கு அம்பிகா பயன்படுத்திய வசனம் ஒன்று நினைவில் வந்து போனது ஜுபினுக்கு. ஜெனிதா பாராதவண்ணம் உதட்டை மடித்துச் சிரித்து, நகைப்பை விழுங்கினான். (அது என்னவாக இருக்கும் எனச் சிந்திப்பவர்கள் தனியாக என்னிடம் வினவுங்கள்)

கொரோனா என்னும் கொடிய வைரஸ் தொற்றுக் காலத்தில் மறுநாளிலேயே உலகம் அழிந்து விடுவதைப் போல விரைவாகத் திருமணம் செய்து கொண்டவர்கள் அனைவரும். ‘பாதி வெந்த முட்டைகள்’ என்பதன் ஆங்கிலப் பதத்தை உங்களின் மைன்ட் வாய்ஸ் மெலிதாக முணுமுணுப்பது என் காதுகளை அட்வான்ஸாக இப்போதே எட்டிவிட்டது. ஒருவேளை அவ்வாறு முணுமுணுக்கவில்லை என்றாலும் அடியாளுக்காக முணுமுணுத்தது எனப் பொய்யாவது கூறுங்களேன். மனதைத் தேற்றிக் கொள்கிறேன்.

பள்ளிப்படிப்பை மட்டுமே முடித்திருந்த மாணவிக்கும் மாணவனும் மணவாளன் – மணவாட்டியாக அமர்ந்திருக்க, பெற்றோர்கள் தலைமையில் ஊரார் முன்னிலையில் திருமணம் நடக்கிறது. “காதல் கணவா.. உந்தன் கரம்விட மாட்டேன்...”, “கண்ணே மணியே... உன்னைக் கைவிட மாட்டேன்...” என்பதான பின்னணி இசையை அவர்கள் ஒலிக்கவிட்டுப் பதிவேற்றியிருக்க, “இதுங்களை எல்லாம் அள்ளிட்டு வந்து ரெண்டு தட்டு தட்டியிருக்கணும்... நைன்டீஸ் கிட்ஸ் வயித்தெரிச்சலைக் கொட்டிக்கிட்டு...” என மனதிற்குள் திட்டிக்கொண்டான் முகுந்த்.

வரிசையாகப் பத்து பதினைந்து பதின்ம வயது திருமணங்கள் ஒளிபரப்பப்பட, கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டனர் சிலர். அத்தோடு நிறுத்தாமல் திருமணக் கோலத்திலும் கிங்காங் செயலில் காணொளி பதிவேற்றியிருந்தனர் சில அறிவுஜீவிகள்.

“சத்தியமா சொல்லுறேன்... தாலி ஒண்ணு கட்டுடா... தடுக்க யாரும் வந்தாலும் தாறுமாறா வெட்டுடா...” என அந்தப் பதினெட்டு வயது சிறுமி பதினெட்டு வயது சிறுவனைப் பார்த்து பாட, சிலருக்கு காதின் வழியே புகைவராத குறைதான்.

“ஏன்டா தடுக்க வர்றது இவளோட அப்பனா இருந்தாக்கூடத் தாறுமாறா வெட்டிடலாம்ன்னு சொல்றாளோ??” என நாதன் முகுந்தின் காதில் கிசுகிசுக்க, “அதான் யாரு வந்தாலும் வெட்டுன்னு சொல்லிட்டாளே... எந்தக் கொம்பன் வந்தாலும் பாரபட்சம் பார்க்காம வெட்டிவீசிட்டு போயிட்டு இருக்கலாம் போல..” எனப் பதிலிறுத்தான் அவன்.

“எனக்காகப் பொறந்தாயே எனதழகா!! பிரியாம இருப்போமே பகலிரவா!! உனக்கு வாக்கப்பட்டு வருஷங்க போனா என்ன போகாது உன்னோட பாசம்...” எனப் பாடிய சிறுமியின் கழுத்தில் போட்டிருந்த புதுத்தாலியின் ஈரம்கூடக் காய்ந்திருக்கவில்லை. “என்னடா இது??! இந்தப் பாட்டுக்கும் இந்தப் பொண்ணுக்கும் என்னடா சம்பந்தம்?!” என நாதன் தலையில் கைவைத்து அமர்ந்துவிட, “இட்ஸ் அ மேனுபேக்ச்சரிங் டிபெக்ட்... ஒண்ணும் பண்ண முடியாது...” என உதட்டைச் சுளித்தான் மற்றொருவன்.

“அடேய் ஆண்டியப்பா... என்னை ஏன்டா இப்படியான ஆளுங்களோட பெத்து விட்டுட்டுப் போய்ச் சேர்ந்த??” என முகுந்த் விட்டத்தைப் பார்த்து பிதற்ற, “ஒருநாள் பார்க்கிற நமக்கே இப்படி இருந்தா உள்ளேயே ஊறிக்கிட்டு இருக்கிற இவங்க நிலைமையை யோசிச்சுப் பாரு.. மூளை எந்த அளவு மழுங்கியிருந்தா இப்படி ஆகியிருப்பாங்க...” என அவர்களுக்காகப் பச்சாதாபப்பட்டான் ஒருவன்.

இங்கே இவ்வாறான உரையாடல்கள், சீண்டல்கள், பரிதாபங்கள் சென்று கொண்டிருக்க, அங்கே காணொளிகள் ஜரூராக ஓடிக் கொண்டிருந்தது. இளம்வயது புதுமணத் தம்பதிகள் தங்களுக்குள் இருக்கும் அன்னியோன்யத்தை அப்படியே காட்சிப்படுத்திப் பதிவிட்டிருந்தனர். நல்லவேளையாக அங்கே அமர்ந்திருந்த நைன்டீஸ் கிட்ஸ் எவரும் அதைப் பார்த்து மனதைக் புண்ணாக்கிக் கொள்ளவில்லை.

வெண்ணிலாதான் உச்சக்கட்ட கோபத்திற்குச் சென்றிருந்தாள். ஒரு வளரிளம் பருவ குழந்தையின் தாயாக வெகுண்டெழுந்திருந்தாள். ஜுபினின் வார்த்தைக்கு மரியாதை கொடுத்துதான் அவ்விடம் அமைதியாக அமர்ந்திருந்தாள். இல்லையேல் அந்த ரகக் காணொளிகள் பதிவிட்டிருந்த அத்தனை பேரின் கழுத்தையும் கடித்து, குருதியைக் குடித்திருப்பாள். அத்தகைய கோபம் கனன்று கொண்டிருந்தது அவளுக்குள்.

அவள் இவ்வாறென்றால் அங்கே இருந்த ஒருசிலருக்குமே ஒருவித ஒவ்வாமை மனநிலைதான். அவர்களுக்கு உண்மையும் தாங்கள் செய்துவந்த தவறும் சற்றே புரியத் தொடங்கியிருந்தது. ஏனென்றால் அப்படியானதொரு வலைத்தளச் செயலியில்தானே தாங்களும் ‘ஒரே குட்டையில் ஊறிய மட்டையாக’ கிடந்திருக்கிறோம் என உணர்ந்தனர். என்னதான் தாங்கள் முகம் சுளிக்க வைக்காத காணொளிகளைப் பதிவேற்றினாலும் இருவருக்கும் ஒரே அளவுகோலன்றோ?! கழிவுநீரில் பூத்தது மணம்தரும் மல்லிகையே ஆனாலும் கூந்தலில் சூடிக்கொள்ள முடியாதல்லவா?! இப்போது அவர்களுக்குத் தாங்கள் செய்த காரியங்கள் அனைத்தும் தொண்டைக்குள் சிக்கிக்கொண்டு உறுத்துவதைப் போல இருந்தது.

இந்த வகையிலான காட்சிகள் அனைத்தும் ஒளிபரப்பட்டுக் கொண்டிருக்க, ஒரு கட்டத்திற்குமேல் வெண்ணிலாவால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. “சார்... ப்ளீஸ்.. தயவு செஞ்சு ஸ்டாப் பண்றீங்களா??” என அவள் கத்திவிட, தங்கள் திட்டம் சிறிது சிறிதாக வெற்றிபெறுவதை மானசீகமாக உணர்ந்தனர் ஜெனிதாவும் ஜுபினும்.

“இதென்ன பிரமாதம்? இதைவிடப் பெசல் ஐட்டம் இருக்குது..” என மனதிற்குள் நினைத்துக் கொண்ட ஜுபின், “வினித்.... இதை ஸ்கிப் பண்ணிட்டு, அடுத்த வீடியோ ப்ளே பண்ணுங்க...” என உத்தரவிட்டான்.

அதுவும் இதைப் போன்றதொரு கப்பிள் சீரிஸ் காணொளிக் கோர்வை தான். ஆனால் அதில் ஆடிக் கொண்டிருந்தவர்கள் பலர் இன்னமும் பதின்பருவத்தைத் தாண்டாதவர்கள்.

அவற்றில் வெண்ணிலா ஒளிபரப்ப அனுமதித்த காட்சிகளின் தொகுப்பு இதோ...

• பதினைந்து சிறுவன் ஒருவன் நடந்து கொண்டிருக்க, பின்னாலிருந்து ஓடிவந்த பதிமூன்று மதிக்கத்தக்க சிறு பெண்ணொருத்தி அவனது கையைப் பற்றிக் கொள்கிறாள். “பயப்பட வேணாம்டி.. உன் புருஷன் நான்தான் டி...” எனப் பாடுகிறான் அவன். காதலுடன் அவனைப் பார்த்து புன்னகைத்துவிட்டு அவனது தோளில் சாய்ந்து கொள்கிறாள் அவள்.

• பதினேழு வயது சிறுவனும் சிறுமியும் மொட்டை மாடியில் ‘டைட்டானிக்’ ஜாக் – ரோஸ் போஸில் நின்றுகொண்டு மழையை ரசித்துக் கொண்டிருக்கின்றனர்.

• கல்லூரி மாணவன் ஒருவன் தன் சொந்தக் குரலில் பேசுகிறான். “ஹாய் ப்ரெண்ட்ஸ்... என் லவ்வர்.. அவளைப் பார்த்து பத்து நாள் ஆச்சுது... அவளுக்கு அரையாண்டு லீவ் விட்டிருந்தாங்க.. அவ இப்போ ஒன்பதாவது படிச்சிட்டு இருக்கிறா... லீவுல அவளைப் பார்க்கிறதுக்கு எவ்வளவோ ட்ரை பண்ணினேன்.. பட்.. பார்க்க முடியல.. உப்ப்... இப்போ.. இந்த நிமிஷம்... பத்து நாள் கழிச்சு அவளைப் பார்க்கப் போறேன்.. வாங்க அவ எப்டி ரியாக்ட் பண்றான்னு பாருங்க..” என அலைபேசியை நண்பனிடம் கொடுத்து காட்சிகளைப் படமாகப் பதிவுசெய்யுமாறு கூறிவிட்டு, அந்தப் சிறுமியை நோக்கி நடக்கிறான். மரத்தடியில் பள்ளி சீருடையுடன் நின்று கொண்டிருந்த சிறுமி இவனைப் பார்த்ததும் பெருமகிழ்வுடன் ஓடி வருகிறாள். ஓடிவந்து அவனை அணைத்துக் கொள்கிறாள். “உண்மைக்காதல் யாரென்றால் உன்னையும் எனையும் சொல்வேனே... நீயும் நானும் பொய்யென்றால் திருடிக் கொல்வேனே...” என்னும் பாடலைப் பாடுகிறான் அவனது தோழன்.

அடுத்ததாக வரிசையாக வாயசைக்கும் வீடியோஸ் மட்டும் வரத் தொடங்கின.

“பூம் பூம் மாட்டுக்காரன்.. நீ உம் சொன்னா ஊட்டுக்காரன்...”, “ரெண்டுலதான் ஒண்ணைத் தொட வர்றியா??”, “திண்டுக்கல்லு திண்டுக்கல்லு பெரிய பூட்டு எனக்கு.. உன்கிட்ட தான் திறந்து பார்க்க கள்ளச் சாவி இருக்கு...”, “திண்ணையில இடமிருக்கு நீ தூங்கப் போயேண்டி... வெண்ணெயில மோர் கடையும் வேலையெல்லாம் வேணாம்டி...”, “மாரளவு இடிக்கையிலே ஓரளவு தொடவா??”, “மூச்சுக் காத்துல மாருதம் போல மாமா வா மார்போடு சாஞ்சுக்கோ... நெஞ்சில் சாஞ்சுக்கோ... என்னை மேய்ஞ்சிக்கோ...” என ஒவ்வொரு பாடல்களாக ஒலிக்கத் துவங்க, “டேய்... என்னடா... இதுங்களாம் இப்படிப் பண்ணிட்டு இருக்குதுங்க? இதுக்கான அர்த்தம் தெரிஞ்சுதான் இப்படியெலாம் பண்றாங்களா?? கேட்கவே காது கூசுற வகையில் இரட்டை அர்த்தம் கொண்ட வரிகள் இதெல்லாம்... பத்து பதினைஞ்சு வயசு பிள்ளைங்க இப்படி ஆடுறதையும் பாடுறதையும் எப்படிதான் எல்லாரும் ரசிக்கிறாங்களோ?” என முகத்தைச் சுளித்தான் நாதன்.

“டேய்ய்ய் இதைப் பார்க்கிறதுக்கும் ஒரு கூட்டம் இருக்குது... யாருமே பார்க்காம இருந்தா எப்படி அடுத்தடுத்த வீடியோ பண்ணத் தோணும்... எல்லாரும் ஆர்வமா பார்க்கப் போய்தான் அடுத்தடுத்து எல்லாரையும் அட்ராக்ட் பண்ணனும், சாடிஸ்பை பண்ணனும்ன்னு இவங்க இப்படிலாம் பண்றாங்க...” என்றான் கூட்டத்தில் ஒருவனான கார்த்திக்.

“ஆனாலும் கொஞ்சம் ஏத்துக்கக் கூடியதா இல்லைடா... எல்லாரும் பார்க்கிறாங்க அப்படிங்கறதுக்காக என்ன வேணா செய்யலாமா??” என மற்றொருவன் கூற, “அடேய்... குட்டி விவேக் பத்தி தெரியுமா?! மண்டை பத்தரம்...” என்றான் ஒருவன்.

“என்னடா குட்டி விவேக்??” எனத் தோழர்கள் அனைவரும் அவனிடம் கதைகேட்கும் நோக்கில் நெருங்கி அமர, “எவ்ரி ஒன் இஸ் தி லெஜென்ட் அன்டில் தி ரியல் ஒன் அரைவ்ஸ்...” எனக் கூறிவிட்டுச் சத்தமாகச் சிரித்தான் அவன்.

அனைவரும் ஒன்றும் புரியாமல் அவனைப் பார்க்க, இந்தச் சத்தத்தைக் கேட்டு திரும்பிப் பார்த்தான் ஜுபின். “நாதன்... அங்கே என்ன சத்தம்?!” என அவன் கேட்க, “பேசிக்கிட்டிருக்கோம் சார்...” என நாதன் கூற, “இல்ல சார்... குட்டி விவேக் வீடியோ இருந்தா போடணுமாம் சார்... எல்லாரும் ஆர்வமா இருக்கிறாங்க...” என முந்திக்கொண்டு உரைத்தான் முகுந்த்.

“ம்ம்ம்ம்...” எனக் கூறிவிட்டு திரும்பிக் கொண்ட ஜுபின், “வினித்... நேயர் விருப்பம்... அந்த விவேக் வீடியோ ஓட விடு...” என்றான்.

அதில் பதினான்கு வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் தோன்ற, “இவனாடா குட்டி விவேக்?! இவனுக்காடா இவ்ளோ பில்டப்?” எனக் கேட்டனர் அனைத்து தோழர்களும்.

“ஜஸ்ட் வெயிட் அண்ட் வாட்ச்...” என அவன் கூறவும், அனைவரும் ஆர்வமாகப் பார்க்கத் துவங்கினர்.

முதலில் சற்றே ஸ்டைலாகக் கதாநாயகன் போன்ற நடை, உடை பாவனைகளில் அவன் நடந்துவருகிறான். சட்டை பட்டன்கள் அனைத்தும் திறந்திருக்க, அருகில் கிடந்த கட்டையைக் காலால் ஒரு முனையில் மிதிக்க, அது மேலெழுகிறது. தன் கையில் அதை லாவகமாகப் பிடித்தவன் அருகில் நின்றுகொண்டிருந்த ஒருவனை அடிப்பது போலப் பாவனைச் செய்ய, அவன் விழுகிறான். நாக்கின் அடியில் ஒளித்து வைத்திருந்த குச்சியை நாவு மற்றும் பற்களால் வெளியில் எடுத்து ஸ்டைலாகக் கடித்துக் கொண்டே நடக்கிறான். “ராஜூ பாய்... ராஜூ பாய்...” எனப் பாடியவாறே பின்னால் நடக்கின்றனர் அவனது தோழர்கள்.

அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் பாடல்கள், காட்சிகளை மறுஉருவாக்கம்(!) செய்திருக்க, அனைவருக்கும் அவன் ஒரு டுபாக்கூரு போலவே தெரிந்தான்.

பின்னர் ஒரு காணொளியில், “ப்ரெண்ட்ஸ்... நான் கமிட்டாகிட்டேன்... சோ யாரும் இனி எனக்கு ப்ரொபோஸ் பண்ணாதீங்க... ஆல்ரெடி என் மனசை அவகிட்டே கொடுத்துட்டேன்.. இனி என்னை யாரும் லவ் டார்ச்சர் செய்யாதீங்க... சாரி அக்காஸ், ஆன்ட்டீஸ்..” எனப் பேசியிருந்தான்.

அடுத்ததாக ஒளிபரப்பட்ட காணொளியில், “ப்ரெண்ட்ஸ்... ஏற்கனவே சொல்லியிருந்தேன்ல நான் கமிட்டாகிட்டேன்னு.. என் ஆளை உங்க எல்லாருக்கும் இன்டரடியூஸ் பண்றதுக்குதான் இந்த வீடியோ போடுறேன்... இங்க பாருங்க...” என அருகில் நின்று கொண்டிருந்த பதிமூன்று வயது மதிக்கத்தக்க சிறுமியைக் காட்டுகிறான். அவளும் அவனது மார்பில் சாய்ந்தவாறே புன்னகையுடன், “ஹாய் ப்ரெண்ட்ஸ்... நானும் இவரும் மூணு நாளா லவ் பண்றோம்.. எங்க லவ் ஸ்டோரி என்னனு நாளைக்கு லைவ்ல சொல்றோம்..” என்கிறாள் அந்தச் சிறுமி.

இப்போது அவர்களின் நேரலை காட்சி காட்டப்படுகிறது. “ப்ரெண்ட்ஸ்.. எல்லாரும் எங்க லவ் ஸ்டோரி என்ன, எப்படி லவ் பண்ண ஆரம்பிச்சோம்னு கேட்டுட்டு இருக்கிறீங்க... ஆக்சுவலி இதை நீங்க என்கிட்டே கேக்கக் கூடாது... உங்க குட்டி விவேக்கிட்டே தான் கேட்கணும்... அவர் பெர்மிஷன் கொடுத்தாதான் நான் சொல்ல முடியும்... என்ன பேபி சொல்லிடவா??” என மறுமுனையில் வீடியோ லைவில் இருக்கும் அந்தச் சிறுவனிடம் கேட்கிறாள் அந்தச் சிறுமி.

“ம்ம்ம் சொல்லு பேபி...” என அவன் அனுமதியளிக்க, “ஆக்சுவலி... நான் சென்னை சரிங்களா... அவரு பாண்டிச்சேரி... ரொம்ப நாளா அவரைப் பாலோ பண்ணிட்டு இருந்தேன்.. அவரோட கிங்காங் வீடியோஸ் எல்லாம் ரொம்பப் பிடிக்கும்.. அப்போதான் ஒருநாள் அவர் சென்னை வந்திருந்தார்... பார்த்ததும் ப்ரொபோஸ் பண்ணிட்டாரு... நானும் ஓகே சொல்லிட்டாரு.. திரும்ப ஊருக்குப் போனதும் அவரு அப்பா அம்மாகிட்டே சொன்னதும் அத்தை ஓகே சொல்லிட்டாங்க.. மாமா கொஞ்சம் தயங்கினாங்க... உடனே நான் ஒருநாள் கால் பண்ணி, மாமா எப்படி இருக்கிறீங்க மாமான்னு கேட்டேன்.. அவ்ளோதான்.. அப்புறம் அவரும் கிளீன் போல்டு.. எங்க வீட்டுல அவர் போன்ல பேசினதுமே ஓகே சொல்லிட்டாங்க.. இவ்ளோ தங்கமான பையன் நாமக்கு தேடினாலும் கிடைக்கமாட்டான்னு.. சோ நாளையில இருந்து நாங்க கப்பிளா பண்ற வீடியோஸ் எல்லாம் போஸ்ட் பண்ணுவோம்...” என அந்தப் பெண் பேசியதைத் தொடர்ந்து சில காணொளிகள் இணைந்தாற் போலக் காட்டப்பட்டன,

வெண்ணிலாவைத் திரும்பிப் பார்த்த ஜெனிதா, “இவங்க இப்படிப் பண்ணிட்டு இருந்ததைப் பார்த்து சிலர் அவங்க ஐடியை ரிப்போர்ட் அடிச்சிட்டாங்க... ஒருத்தர் ஒருபடி மேலே போய் ஹேக் பண்ணிட்டாரு.. அதுக்கு அவங்க ரியாக்ஷன் பாருங்க.. அதுதான் அல்டிமேட்டு...” என்றாள்.

நேரலையிலேயே அழுகிறான் அந்தச் சிறுவன். “டேய் யாருடா என்னோட ஐடியை ஹேக் பண்ணினது? ஒழுங்கு மரியாதயா கொடுத்துடுங்க சொல்லிட்டேன்.. எவ்ளோ கஷ்டப்பட்டுப் பாலோவர்ஸ், லைக் எல்லாம் சேர்த்து வச்சிருந்தேன் தெரியுமா?? என்னைக்கும் அடுத்தவங்க உழைப்பை சுரண்ட நினைக்காதீங்க... ப்ளீஸ்டா... திருப்பிக் கொடுத்துடுங்க..” எனக் கூற, நேரலை அழைப்பில் இணைகிறாள் அந்தச் சிறுமி.
 
Last edited:
Status
Not open for further replies.

New Threads

Top Bottom